மணிவண்ணன் தரப்பு இன்று மேற்கொள்ளவுள்ள அதிரடி நடவடிக்கை

மணிவண்ணன் தரப்பு இன்று மேற்கொள்ளவுள்ள அதிரடி நடவடிக்கை!aதமிழ் தேசிய மக்கள் முன்னணியில் வகித்த பொறுப்புக்கள் அனைத்தும் பிடுங்கப்பட்ட பின்னர், அடுத்த கட்டமாக என்ன நடவடிக்கையெடுப்பது என்பது குறித்து சட்டத்தரணி வி.மணிவண்ணன் தனது ஆதரவாளர்களுடன் கலந்துரையாடி வருகிறார்.
இதன்படி, நேற்று அவரது வீட்டில் பெருமளவு இளைஞர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார். இதன்போது பெருமளவானவர்கள் அவரை கட்சியை விட்டு விலகும்படி வலியுறுத்திக் கேட்டுக் கொண்டனர்.

ஜனாதிபதி தேர்தலில் என்ன முடிவெடுப்பது என்பதை ஆராய கூடிய தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மத்தியகுழு கூட்டத்தில், சஜித் தரப்பை ஆதரிக்கலாமென்றும், பல்கலைக்கழக மாணவர்களின் இணக்கப்பாட்டு முயற்சி முடிவதற்கு முன்னர் முன்னணி ஒரு நிலைப்பாட்டை அறிவிக்ககூடாதென்றும் மணிவண்ணன் தனது கருத்தை தெரிவித்திருந்தார்.

மத்தியகுழு கலந்துரையாடலில் தலைமையின் முடிவிற்கு மாறாக எப்படி அவர் கருத்து தெரிவிக்கலாம் என முன்னணி தலைவர்கள் கொதித்து போயினர்.

அதுதவிர, முன்னணி தலைவர்களை விமர்சித்த கனடிய குடியுரிமையை கொண்ட யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஒருவருடன் பேசியதும் மணிவண்ணன் செய்த மகா துரோகமாக கட்சியால் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மணிவண்ணனை பொறுப்புக்களிலிருந்து நீக்குவதாக கஜேந்திரகுமார் வட்ஸ்அப் வழியாக தகவல் அனுப்பியிருந்தார்.

இதையடுத்து மணிவண்ணன் வீட்டில் தொடர்ந்து ஆதரவாளர்கள் குவிந்து வருகிறார்கள்.

அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாக நேற்றும் இன்றும் மணிவண்ணன் கலந்துரையாடல் நடத்தி இறுதி முடிவை அறிவிக்க திட்டமிட்டுள்ளார். இதன்படி ஒரு தொகுதி ஆதரவாளர்களுடன் நேற்று கலந்துரையாடல் நடந்தது. இன்று இரவும் கலந்துரையாடல் நடைபெறவுள்ளது. இதன்பின்னர் மணிவண்ணன் தனது முடிவை அறிவிப்பார்

Be the first to comment

Leave a Reply