அவன் பிடிபட்டால் எங்களைக் காட்டிக்கொடுத்துவிடுவான் – நண்பனை கொடூரமான முறையில் அடித்தே கொன்ற கொள்ளைக் கும்பல்..!

அவன் பிடிபட்டால் எங்களைக் காட்டிக்கொடுத்துவிடுவான் – நண்பனை கொடூரமான முறையில் அடித்துக்கொன்ற கொள்ளைக் கும்பல்

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அருகே திருட்டு நகைகளைப் பங்கு பிரிப்பதில் ஏற்பட்ட தகராறில், ஆறு பேர் சேர்ந்து கூட்டாளியையே அடித்துக் கொன்று கிணற்றில் வீசிய சம்பவம் அரங்கேறியுள்ளது. அரக்கோணத்தையடுத்த மேல்பாக்கம், சரணாலயா நகரில் உள்ள பாழுங்கிணற்றில் கடந்த 18 – ம் தேதி அழுகிய நிலையில் வாலிபர் ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக அரக்கோணம் நகர காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திவந்தனர். அதில், திருட்டு நகையைப் பங்கு பிரிப்பதில் ஏற்பட்ட தகராறு கொலையில் முடிந்தது தெரிய வந்தது.

‘சோகனூர் கிராமத்தைச் சேர்ந்தவன் தீனா. இவன் திருத்தணி, அரக்கோணம், சோழிங்கர் ஆகிய பகுதிகளில் திருட்டு, வழிப்பறி, செயின் பறித்தல், மிரட்டல் ஆகிய தொடர் குற்றங்களைச் செய்து வந்தான். இவனுடன் இதே பகுதியைச் சேர்ந்த லோகேஷ், சதாம் பிரபாகரன், நவீன், சச்சின், கோகுல் கண்ணன், அஜீத் குமார் ஆகிய ஆறுபேரும் கூட்டாக திருடி வந்தனர். திருடும் நகைகளை ஏழு பேரும் தங்களுக்குள் பங்கிட்டு கொள்வார்கள்.

இவர்களில் சோகனூர் தீனா மட்டும் திருடும் நகையைப் பதுக்குவதில் கில்லாடியாக இருந்துள்ளான். இது மட்டுமல்லாமல் இவன் போலீசில் சிக்கினால் போதும் மற்ற ஆறு பேரையும் காட்டிக்கொடுத்து விடுவதாகவும் சொல்லப்படுகிறது. இதனால், அவர்களுக்குள் பிரச்னையும் முன் விரோதமும் இருந்துவந்தது. இந்த நிலையில், ஒரு வாரத்துக்கு முன்பு திருட்டு நகைகளைப் பங்கு பிரிப்பதில் தீனாவுக்கும் அவனது நண்பர்களுக்கும் நகையை பங்கிடுவதில் தகராறு ஏற்பட்டது.

அப்போது, தீனாவைக் மற்றவர்கள் கடுமையாகத் தாக்கியும், வெட்டியும் கொலை செய்தனர். தீனாவின் உடலை பருத்திப்புத்தூர் ஏரியில் புதைத்துவிட முயற்சி செய்தனர். ஆனால், அங்கு ஆள் நடமாட்டம் இருந்ததால், தீனாவின் உடலை சாக்கில் கட்டி மேல்பாக்கம், சரணாலயா நகரில் உள்ள பாழுங் கிணற்றில் வீசிவிட்டுச் சென்றுவிட்டனர்.

கடந்த 18 – ம் தேதி உடலைக் கைப்பற்றி, விசாரித்து வந்த காவல் துறை அதிகாரிகள் ஆறு பேரையும் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து கொலைக்குப் பயன்படுத்திய ஆயுதங்கள், மூன்று சக்கர வாகனங்களைப் பறிமுதல் செய்தனர். கொலை செய்த 6 பேறும் இப்போது வேலூர் மத்திய சிறைச் சாலையில் அடைக்கப்பட்டுள்ளனர்

Be the first to comment

Leave a Reply