நாட்டு மக்களுக்கு சவேந்திர சில்வா விடுத்துள்ள கடும் எச்சரிக்கையும் கோரிக்கையும்..!

நாட்டில் அடுத்து வரும் சில நாட்களில் சமூகத்தில் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் கண்டறியப்படும் ஆபத்து இருக்கின்றது.

இதனால், கொரோனா வைரஸில் இருந்து பாதுகாத்துக்கொள்ள வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு ஆலோசனைகளை அப்படியே பின்பற்றுமாறு மக்களிடம் கோரிக்கை விடுக்கின்றோம்.”

இவ்வாறு கொரோனாத் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவரும் இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

இந்த வாரம் மிக முக்கியமானது. கொரோனா வைரஸ் தொற்று இருப்பதை அறியாமல் கந்தக்காடு போதைப்பொருள் புனர்வாழ்வு நிலையத்தில் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் ஆகியோரில் சிலர் விடுமுறையில் வீடுகளுக்குச் சென்றுள்ளனர்.

கந்தக்காடு போதைப்பொருள் புனர்வாழ்வு நிலையத்தில் கொரோனா நோயாளி அடையாளம் காணப்பட்டதும் நாங்கள் அனைவரையும் மீண்டும் உள்ளே அழைத்துக்கொண்டோம்.

எனினும், அவர்கள் சமூகத்தில் நடமாடிய இடங்கள் உள்ளன. இதனால், கொரோனா சமூகத்துக்குள் செல்லாது என்று எவராலும் கூற முடியாது.

அனைவரும் மிகவும் அர்ப்பணிப்புடன் பாதுகாத்துக்கொண்ட இந்த நிலைமையைத் தொடர்ந்தும் தக்கவைத்துக்கொள்ள அனைவரும் சுகாதார ஆலோசனைகளைப் பின்பற்றுவது மிகவும் முக்கியமானது.

அடுத்த நான்கு, ஐந்து நாட்களில் ஏதோ ஓர் ஆபத்து இருக்கின்றது. முகக்கவசங்களை அணியுங்கள், உங்களைப் பாதுகாத்துக்கொள்ளுங்கள்.

தொற்றுக்குள்ளாகி மற்றுமொருவரைத் தொற்றுக்குள்ளாக்காதீர்கள் என மக்களிடம் கோரிக்கை விடுகின்றோம் என்றார்.

Be the first to comment

Leave a Reply