முல்லை மீனவர்களின் பிரச்சினைகளுக்கு சுமூகமான தீர்வு: அமைச்சர் டக்ளஸ்..!

முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர்கள் எதிர்கொண்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வு காணப்பட்டுள்ளதாக கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

முல்லைத்தீவு, கரைத்துறைப்பற்று பிரதேச செயலகத்தில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற கடற்றொழிலாளர்கள் சார் கலந்துரையாடல் தொடர்பாக கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவத்தார்.

குறித்த கலந்துரையாடலில், வெளிச்சம் பாய்ச்சி மீன் பிடித்தலை தடை செய்தல், அனுமதிக்கப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி தொழிலில் ஈடுபட அனுமதித்தல், வெளிமாவட்ட மீனவர்களைக் கட்டுப்படுத்தல், கொக்குளாய் கடல் நீரேரியில் இயந்திரப் படகு பயன்டுத்தி மீன் பிடித்தலைத் தடை செய்தல், உள்ளூர் மீனவர்களுக்கு கடலட்டை பிடிக்கும் அனுமதி வழங்கல் ஆகிய பிரச்சினைகள் கலந்துரையாடப்பட்டதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குறிப்பிட்டார்.

மேலும், கரைவலை தொழிலில் ஈடுபடுவோருக்கு நிரந்தர அனுமதி வழங்கல், நந்திக் கடல் மற்றும் நாயாறு போன்ற நீர் நிலைகளைப் புனரமைத்தல் உட்பட முல்லைத்தீவு மீனவர்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகள் கலந்துரையாடப்பட்டதாகத் தெரிவித்த அவர், அவற்றில் பெரும்பாலனவற்றிற்கு சுமூகமான தீர்வு காணப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, சுருக்கு வலைப் பயன்பாடு போன்ற தீர்வு காணப்படாத விடயங்களுக்கு, அடுத்த வாரமளவில் மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் கடற்றொழில் திணைக்களத்தின் முல்லைத்தீவு உதவிப் பணிப்பாளர் ஆகியோர் தலைமையில் கூடி ஆராய்ந்து பெரும்பாலானவர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளித்து சமூகமான தீர்வினைக் காணுமாறு அறிவுறுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Be the first to comment

Leave a Reply