வடகிழக்கு தமிழர் பூர்வீகம் என்பதை மறுக்க முடியாது..!

வடக்கு, கிழக்கு மாகாணங்கள் தமிழர்களின் பூர்வீக பிரதேசம் என்பதை எவராலும் மறுக்க முடியாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

வடக்கு, கிழக்கு மாகாணங்கள் தமிழர்களின் பூர்வீக பிரதேசம் அல்ல என தொல்பொருள் தொடர்பான ஜனாதிபதி செயலணியின் உறுப்பினர் எல்லாவல மேதானந்த தேரர் குறிப்பிட்டுள்ள கருத்து தொடர்பாக தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “செயலணியின் உறுப்பினர்களின் செயற்பாடுகள் குறித்து ஜனாதிபதியிடம் தனிப்பட்ட முறையில் பேசவுள்ளேன். அரசாங்கத்தின் கொள்கைக்கு அமையவே செயலணிகள் செயற்பட வேண்டும்.

ஒரு பிரதேசத்தில் எந்த இனத்தவர்கள் அதிகளவில் வாழ்கின்றார்களோ அங்கு அந்த இனமே பெரும்பான்மையினமாக கருதப்படும்.

தெற்கில் சிங்களவர்கள் அதிகமாக வாழ்கின்றமையினால் அம்மாகாணத்தை சிங்களவர்கள் உரிமைக் கொண்டாடுகிறார்கள் அதேபோலதான் வடக்கு கிழக்கும்.

வடக்கு மற்றும் கிழக்கில் தமிழ் மக்கள் வரலாற்று காலம் தொடக்கம் வாழ்ந்துள்ளமைக்கான ஆதாரங்கள் மத ஸ்தலங்களின் ஊடாகவும் மத வழிப்பாடுகளுடனும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.  இலங்கை பல்லின சமூகம் வாழும் நாடு அனைத்து இன மக்களின் உரிமை மற்றும் கலாசாரங்கள் பாதுகாக்கப்பட வேண்டும்.

நாட்டை பிரித்தாள வேண்டும் என்ற எண்ணத்தினால் யுத்தம் தோற்றமடைந்தது. நாடு பிளவுப்படுவதற்கு எப்போதும் அனுமதி வழங்க முடியாது. இருப்பினும் அவரவர் உரிமைகள் முரண்படாத வகையில் வழங்கப்படுதல் அவசியமாகும்” என அவர் மேலும் தெரிவித்தார்.

Be the first to comment

Leave a Reply