வட கிழக்கில் தீவிர இராணுவ மயப்படுத்தல் ஏன்..? ஐ.நாவின் கண்ணில் சிக்குண்ட ஸ்ரீலங்கா..!

தமிழ் மக்கள் செறிந்து வாழும் தாயகப்பகுதிகளில் இராணுவ மயப்படுத்தலாலேயே ஐ.நாவின் பார்வைக்குள் ஸ்ரீலங்கா சிக்குண்டுள்ளதென முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர ஆகியோர் கூட்டாகத் தெரிவித்துள்ளனர்.

இதை உறுதிப்படுத்தும் வகையில் ஐ.நா. மனித உரிமைகள் சபையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள விசேட அறிக்கையாளரின் வருடாந்த அறிக்கையினை மேற்கோள்காட்டி கருத்துரைக்கும் போதே அவர்கள் இதனை தெரிவித்துள்ளனர்.

குறித்த அறிக்கையில், ஸ்ரீலங்காவில் போர் முடிவடைந்து 10 ஆண்டுகள் கடந்துவிட்ட போதும் கூட வடக்கு, கிழக்கு பகுதிகள் இன்னும் இராணுவ மயமாக்கப்பட்டுள்ளது.

அங்குள்ள சிவில் சமூகப் பிரதிநிதிகள் இராணுவத்தினரால் கண்காணிக்கப்பட்டு அச்சுறுத்தப்பட்டு வருகின்றனர்.

இத்தகைய கண்காணிப்பு மற்றும் அச்சுறுத்தல்கள் அவநம்பிக்கை மற்றும் அச்சமான சூழலை உருவாக்குகின்றது என ஐ.நா. விசேட அறிக்கையாளர் கிளெமென்ற் நயாலெட்சோசி வோல் ஐ.நா. மனித உரிமைகள் சபையில் சமர்ப்பித்துள்ள வருடாந்த அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பில் சந்திரிகா, மங்கள ஆகியோர் கருத்து தெரிவிக்கையில்,

இந்த நாட்டில் ஜனநாயக ஆட்சி இடம்பெறுகின்றதெனில் இராணுவ மயப்படுத்தல் தேவையே இல்லை. போர் முடிவுக்கு வந்த பின்னர் வடக்கு, கிழக்கில் தீவிர இராணுவ மயப்படுத்தல் ஏன் என்று ஐ.நா. கேள்வி எழுப்புவதில் நியாயம் இருக்கின்றது.

போரால் பாதிக்கப்பட்ட மக்களைச் சுதந்திரமாக வாழ வழிவிட வேண்டும். அதைவிடுத்து அவர்களைப் பழிவாங்கும் நோக்கும், அவர்களின் ஒவ்வொரு நடவடிக்கைகளையும் கண்காணித்து அச்சுறுத்துவதும் அப்பட்டமான அடிப்படை மனித உரிமை மீறலாகும்.

பாதிக்கப்பட்ட மக்கள் நீதி கோரி ஜனநாயக வழியில் ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்வது சட்டமீறல் அல்ல. ஆனால் இராணுவத்தைக் கொண்டு அடக்க முயல்வது தான் பாரிய சட்ட மீறலாகும். இதை ஆட்சியிலுள்ளவர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

Be the first to comment

Leave a Reply