பயணிக்கு கொரோணா தொற்று பாதிவழியில் பயணிகள் தலை தெறிக்க ஓட்டம்..!

அரசுப் பேருந்தில் பயணித்த தம்பதிக்கு கொரோனா இருப்பதாகத் தகவல் வரவே பயணிகள் பாதி வழியில் இறங்கி அச்சத்தில் தப்பி ஓடி உள்ளனர்.

கொரோனா தொற்று

கடலூர் மாவட்டம் வடலூரைச் சேர்ந்த நபர் ஒருவர், உடல்நிலை சரியில்லாமல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கடந்த இரு தினங்களுக்கு முன்பு வீடு திரும்பியதாகக் கூறப்படுகிறது. மேற்கொண்டு அவரை டிஸ்சார்ஜ் செய்யும்போது, அந்த நபருக்கும், அவர் மனைவிக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. 

இதனைத் தொடர்ந்து, அவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில் பண்ருட்டியிலிருந்து தங்கள் வீட்டிற்குச் செல்ல அரசு பேருந்தில் பயணம் செய்த அவர்களுக்கு, சுகாதாரத்துறை மூலமாக கொரோனா தொற்று இருப்பதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டது. 

இதனையறிந்த சக பயணிகள் அச்சத்தின் காரணமாக பேருந்திலிருந்து பாதி வழியில் இறங்கி அவசர அவசரமாக தப்பி ஓட்டம் பிடித்துள்ளனர்.

தப்பி ஓட்டம்

இதுதொடர்பாக வடலூர் பேருந்து கிளை மேலாளர் அருண்,”சுகாதாரத்துறையினர் அவர்களை தேடி வீட்டிற்குச் சென்றபோது, பண்ருட்டி சென்றுள்ள தகவல் கிடைத்தது, பிறகு அவர்களை தொலைப்பேசி மூலம் தொடர்பு கொண்டபோது, பண்ருட்டியிலிருந்து வடலூருக்குப் பேருந்தில் வந்து கொண்டிருப்பதாகத் தகவல் தெரிவித்துள்ளனர். அதையடுத்து, பேருந்து நடத்துநரிடம் பேச வேண்டும், அவரிடம் தொலைப்பேசியைக் கொடுக்குமாறு சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். பேருந்து நடந்துனரிடம் அந்த தம்பதியருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால், அவர்களை அழைத்துச் செல்ல வந்துகொண்டிருக்கிறோம். ஆகவே, அதுவரை பேருந்தை நிறுத்தி வைக்குமாறு கேட்டுள்ளனர்,” என்றார்.

பேருந்து
Image captionபேருந்து

மேலும் அவர், “இதனையடுத்து, பேருந்தை நெய்வேலி அருகே உள்ள காடாம்புலியூர் பகுதியில் உள்ள காவல்நிலையம் அருகே பேருந்தை நிறுத்தியுள்ளனர். இதையடுத்து, சந்தேகமடைந்த தொற்று பாதிக்கப்பட்ட நபர், மீண்டும் தன்னை தொலைப்பேசியில் அழைத்த அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு எதற்காக அழைத்தீர்கள் என்று கேட்டுள்ளார். இதையடுத்து உங்கள் இருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், சிகிச்சைக்கா அழைத்துச் செல்ல வந்து கொண்டிருக்கிறோம். அதுவரை பேருந்தில் காத்திருக்கும் படி கேட்டுள்ளனர்.

இதனை கேட்ட சக பயணிகள் பேருந்திலிருந்து அவசர அவசரமாக ஓட்டம் பிடித்துள்ளனர். இதன் பின்னர், பேருந்தில் காத்திருந்த கொரோனா தொற்று உறுதியான தம்பதியினர் ஆம்புலன்ஸ் மூலம் சுகாதாரத்துறை ஊழியர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதாக,” தெரிவித்தார்.

பரிசோதனை

“மேற்கொண்டு பேருந்து பண்ருட்டியிலிருந்து காலை 11.45 மணிக்குக் கிளம்பும் போது பேருந்தில் 30 நபர்கள் பயணம் செய்தனர். தம்பதியருக்கு கொரோனா இருப்பது தெரிந்து, பேருந்தை ஓரமாக நிறுத்திய நேரத்தில் பேருந்தில் சுமார் 15 நபர்கள் இருந்துள்ளனர். அவர்கள் அனைவரும் குறித்தும் தகவல் தெரியவில்லை. ஆனால் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநருக்கு கொரோனா பரிசோதனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் பேருந்து நிறுத்தி வைக்கப்பட்ட பேருந்து முழுவதுமாக கிருமிநாசினி தெளித்து பணிமனை கொண்டு செல்லப்பட்டதாக,” கூறுகிறார் வடலூர் பேருந்து கிளை மேலாளர் அருண்.

Be the first to comment

Leave a Reply