கொரோனாவை 19 பெயர்களால் அழைக்க முடியும்; டிரம்ப்..!

கொரோனாவை 19 பெயர்களால் அழைக்க முடியும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஆவேசமாக கூறியுள்ளார்.


அமெரிக்காவில் நவம்பர் 3ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் இடம்பெறவுள்ளது. இந்த தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் தற்போதைய ஜனாதிபதி ட்ரம்பும் எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் துணை ஜனாதிபதியான ஜோ பிடனும் போட்டியிடுகின்றனர்.


கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில், ஓக்லஹோமா மாகாணத்தில் துல்சா நகரில் நடைபெற்ற முதல் தேர்தல் பிரசார கூட்டத்தில் ஜனாதிபதி ட்ரம்ப் பங்கேற்று உரையாற்றியாற்றினார்.


இதன்போது, சீனாவில் இருந்து கொரோனா வைரஸ் வந்தது என்பதற்காக அவர் சீனாவில் கைகளையும் கால்களையும் மட்டுமே பயன்படுத்தி சண்டையிடும் தற்காப்பு கலையான குங்புவை நினைவுபடுத்தும் வகையில் கொரோனா வைரசை குங்புளூ என்ற பெயரால் அழைத்தார். கொரோனா வைரஸ் பரவலுக்கு காரணம் சீனாதான் என அவர் குற்றம் சுமத்தினார்.


தொடர்ந்து உரையாற்றிய அவர், “கொரோனா வைரஸ் தொற்று ஒரு நோய்தான். இதை இதுவரை வரலாற்றில் இல்லாத வகையில் வேறு எந்த நோயையும்விட பல்வேறு பெயர்களால் அழைக்க முடியும்.


நான் குங் புளூ என்று அழைப்பேன். அதன் 19 வெவ்வேறு பதிப்புகளையும் வெவ்வேறு பெயரிட்டு அழைப்பேன். பலர் இதை வைரஸ் என்று அழைக்கிறார்கள். அது வைரஸ்தான். எங்களிடம் 19 அல்லது 20 வெவ்வேறு பெயர்கள் இருக்கின்றன.


அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பரிசோதனையை குறைத்துக்கொள்ள வேண்டும் என்று அதிகாரிகளை கேட்கிறேன். ஏனென்றால், அதிகமாக பரிசோதனைகளை செய்வதால் இன்னும் கூடுதலாக நோயாளிகள் கண்டறியப்படுகிறார்கள்.

கொரோனா பரிசோதனை என்பது இரண்டு பக்கமும் கூர்மையான வாள்.
அதன் மோசமான பகுதி பரிசோதனைதான். நீங்கள் எந்தளவுக்கு பரிசோதனைகளை செய்கிறீர்களோ, அந்த அளவுக்கு கூடுதலாக தொற்று பாதித்தவர்களை கண்டறிய முடியும். எனவேதான் பரிசோதனைகளை குறைத்துக்கொள்ளுங்கள் என்றேன்.

ஆனால் அவர்கள் பரிசோதனைக்கு மேல் பரிசோதனை என்று செய்து கொண்டே இருக்கிறார்கள்” என மேலும் தெரிவித்தார்.

Be the first to comment

Leave a Reply