கடலில் மிதந்து வந்த சீன பரலை உடைத்து பார்த்த பொலிசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!

இந்தியா, சீனா இடையே பிரச்சினை நிலவி வரும் நிலையில், மாமல்லபுரம் அருகே சீன மொழியில் எழுதப்பட்டு, மர்ம டிரம் ஒன்று கரை ஒதுங்கியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கல்வான் எல்லைப்பகுதியில் சீனா ராணுவம் தொடர்ந்து அட்டகாசம் செய்து வருகிறது. சமீபத்தில் நடைபெற்ற தாக்குதலில் 20 இந்திய வீரர்கள் தேசத்துக்காக தங்கள் இன்னுயிரை தியாகம் செய்துள்ளனர்.

இதையடுத்து சீன பொருட்களை பயன்படுத்தக்கூடாது என இந்தியா முழுவதும் எதிர்ப்பு குரல்கள் எழுந்துள்ளன. மேலும் சீன ஆப்களை அதிரடியாக அன்இன்ஸ்டால் செய்து மக்கள் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே உள்ள கொக்கிலமேடு கடற்கரையில் நேற்று சீலிடப்பட்ட தகர டிரம் ஒன்று கரை ஒதுங்கியுள்ளது.

இதைப்பார்த்த மீனவர்கள் அதை உடைத்து பார்த்த போது, 78 பொட்டலங்கள் இருந்துள்ளது. இது குறித்து அவர்கள் பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதால், சம்பவ இடத்திற்கு வந்த பொலிசார் அந்த பொட்டலங்களைக் கைப்பற்றினர்.

அந்த பொட்டலத்தின் மேல் ‘ரீபைன்ட் சைனீஸ் டீ’ என சீன மொழியிலும், ஆங்கிலத்திலும் அச்சிடப்பட்டு இருந்தது. ஒரு பொட்டலத்தை பிரித்து சோதனை செய்த பொலிசார் அதுபோதை பொருளாக இருக்கும் என சந்தேகம் அடைந்து 78 பொட்டலங்களையும் பரிசோதனைக்காக சென்னையில் உள்ள அறிவியல் ஆய்வு பரிசோதனை கூடத்துக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு நடத்தப்பட்ட ஆய்வில் அது ஹெராயின் வகையை சேர்ந்த ‘மெத்தாம்பிடைமின்’ என்ற ஒரு வகை போதை பொருள் என்பதும் அதன் மதிப்பு 100 கோடி ரூபாய் என்பதும் தெரிய வந்துள்ளது.

மேலும் பொலிசார் வருவதற்குள் டிரம்மை உடைத்து பார்த்ததால் சந்தேகத்தின் அடிப்படையில் மீனவர்களிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பதிலுக்கு மீனவர்கள் அது டீசல் இல்லை பெட்ரோல் நிரப்பப்பட்ட டிரம்மாக இருக்கலாம் என்று உடைத்து பார்த்ததாக தெரிவித்தனர்.

பின்பு இதுபோன்று ஏதாவது பொருட்கள் மிதந்தால் உடனே தங்களுக்கு தகவல் கொடுக்க வேண்டும். இப்படி உடைத்து பார்க்கக்கூடாது என்று அறிவுரை வழங்கினர்.

தற்போது பொலிசார் இந்த மர்ம டிரம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Be the first to comment

Leave a Reply