பிரபாகரனின் ஆஸ்தியை நந்திக்கடலில் கரைத்ததைப்போன்றே கருணாவிற்கும் நடக்குமாம்..! ராவண பலய..!

கருணா அம்மான் முன்வைத்துள்ள கருத்துக்கள் பாரதூரமானதானவை. அவர் 2000 – 3000 இராணுவ வீரர்களை கொன்றதாகக் கூறுவது நாட்டில் நடைமுறையிலுள்ள சட்டத்துக்கு முரணானதாகும்.

எனவே அவரை மனித கொலையுடன் தொடர்புபட்ட சட்டத்தின் கீழ் கைது செய்ய முடியும். இதற்கான நேரடியாக நடவடிக்கையை முன்னெடுக்குமாறு ராவணா பலய அமைப்பின் தலைவர் இத்தேகந்த சுததிஸ்ஸ தேரர் தெரிவித்தார்.

நேற்று சனிக்கிழமை ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை விடவும் இது மிகப் பாரதூரமானதாகும். இந்தச் சம்பவம் மாத்திரமின்றி இதே போன்று இவர் இன்னும் பல மனிதப்படுகொலைகளுடன் தொடர்புபட்டவராவார்.

எனவே தற்போது அவருக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்த முடியும். தான் செய்த குற்றத்தை அவரே ஏற்றுக் கொண்டுள்ளார். ஸஹ்ரானைப் போன்றே இவரும் மனிதப் படுகொலையைச் செய்துள்ளார் என்றும் அவர் தெரிவித்தார்.

தேர்தல் களத்திலிருந்து கொண்டு இவ்வாறான கருத்தை பகிரங்கமாக தெரிவிப்பதன் மூலம் மீண்டும் தனி ஈழக் கோரிக்கையை முன்வைக்கின்றாரா என்ற சந்தேகம் எழுகிறது. எனவே ஜனாதிபதி உள்ளிட்ட உயர் அதிகாரிகளிடம் உரிய நடவடிக்கையை துரிதமாக முன்னெடுக்குமாறு கோரிக்கை விடுக்கின்றோம்.

நாட்டிலுள்ள சாதாரண மக்களின் பிள்ளைகளே இராணுவ வீரர்களாக யுத்த களத்துக்குச் சென்றனர். அவர்களே எல்.ரிரிஈ பயங்கரவாத குழுவுக்கு எதிராக முகாம் அமைத்தார்கள். அவ்வாறான அப்பாவிகள் 2000 – 3000 பேரை ஒரே நேரத்தில் கொன்ற இவர் அரசியலில் அங்கத்துவம் வகிக்க முடியுமா?

நாட்டின் சட்டத்தை சவாலுக்கு உட்படுத்திய இது போன்ற நபர்களுக்கு அரசியலில் வாய்ப்பளிக்க முடியுமா ? எனவே கருணா அம்மானுக்கு ஒரு விடயத்தைக் கூற விரும்புகிறேன். முன்னரை போல தற்போது விளையாட முடியாது.

காரணம் தேசிய பாதுகாப்பை ஸ்திரப்படுத்தக் கூடிய தலைவர் உருவாகியுள்ளார். எனவே, மீண்டும் தனி ஈழத்தை பெற வேண்டும் எண்ண இருந்தால் அதனை உடனடியாக ஒழித்துவிடுமாறு எச்சரிக்கின்றோம்.

இல்லையெனில் பிரபாகரனின் கனவு நந்திக்கடலில் கரைக்கப்பட்டதைப் போன்றே உங்களது கனவும் இராணுவ வீரர்களால் கரைக்கப்படும் என்பதை பொறுப்புடன் கூறிக் கொள்கின்றேன்.

Be the first to comment

Leave a Reply