2021 இல் களை கட்ட இருக்கும் கொழும்பின் புதிய துறைமுகம்..! படங்கள்

கொழும்புத் துறைமுக நகரின் பொது மக்களுக்கான, கடற்கரை பொழுதுபோக்குப் பகுதி, அடுத்த ஆண்டில் திறக்கப்படும் என, நகர அபிவிருத்தி, நீர் விநியோகம் மற்றும் வீடமைப்பு வசதி அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

2 கிலோமீட்டர் நீளமுள்ள கடற்கரை இப்போது உருவாக்கப்பட்டு வருவதுடன் கடற்கரை அரங்கம், கடற்கரை பூங்கா, குழந்தைகள் பூங்கா, சிறிய உணவகங்கள், படகு போக்குவரத்து சேவைகளுக்கான மெரினா உள்ளிட்ட உள்கட்டமைப்பு மேம்பாடு விரைவில் தொடங்கப்பட உள்ளது.

பசுமை வலயம், சிறுவர்களுக்கான விளையாட்டுப் பகுதி, நீர்சார் விளையாட்டுகள், இதர வசதிகளைக் கொண்டமைந்த இந்தப் பகுதியில், தென்னை, பாம் மரங்கள், சூழலுக்கு நட்பான பகுதியாக மாற்றியமைக்கும் வகையில், பல்வேறு வகையான இதர சுதேச தாவரங்களையும் கொண்டதாக இப்பகுதி உள்ளது.

அத்துடன் பொழுதுபோக்குப் பகுதியில் நடைபகுதி, சைக்கிள் பாதைகள் போன்றனவும் காணப்படும். காலி முகத்திடலைப் போன்று மூன்று மடங்கு பெரிதானதாக இந்தப் பொழுதுபோக்குப் பகுதி அமைந்திருக்கும்.

இதேவேளை துறைமுக நகர அபிவிருத்திப் பணியில் மொத்தமாக ஈடுபட்டிருந்த 1,600 பணியாளர்களில், தற்போது நிர்மாணத்துறைக்கான கொவிட்-19 பாதுகாப்பு அறிவுறுத்தல்களுக்கு அமைய, சுமார் 500 பேர் மாத்திரமே பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் நிலைமை படிப்படியாக வழமைக்குத் திரும்பும் நிலையில், எஞ்சியுள்ள ஊழியர்களுக்குப் ‘பிசிஆர்’ பரிசோதனைகளை மேற்கொண்ட பின்னர், அவர்களையும் பணிகளில் ஈடுபடுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

Be the first to comment

Leave a Reply