முறுகல் பூகம்பமானது; சீனாவைத்தண்டிக்க கையொப்பமிட்டார் டிரம்ப்..!

சீனாவைத் தண்டிக்கும் சட்டத்தில் கையொப்பமிட்டார் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் – சீனா கண்டனம்

சீனாவில் உய்குர் முஸ்லிம்கள் மற்றும் ஏனைய சிறுபான்மை மக்கள் மீதான தாக்குதலுக்கு சீனாவைத் தண்டிக்கும் வகையில் உருவாக்கப்பட்ட சட்டத்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.

இதனையடுத்து இந்த சட்டத்திற்கு சீனா கடும் கண்டனம் வெளியிட்டுள்ளது.

மத்திய ஆசியாவைச் சேர்ந்த உய்குர் மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட முஸ்லீம் மக்கள் சீனாவின் சிஞ்சியாங் மாகாணத்தில் பெருமளவில் வசிக்கிறார்கள்.

உய்குர் மக்களை அவர்களின் சொந்த கலாசாரத்திலிருந்து வெளியேற்றி, சீன கலாசாரத்துக்கு மாற்றும் முயற்சியில் இரகசிய முகாம்கள், சிறைகள் ஆகியவற்றை ஏற்படுத்தி கொடுமை செய்வதாகச் சர்வதேச அமைப்புகள் நீண்ட நாட்களாக குற்றம் சாட்டி வருகின்றன.

இந்த முகாம்கள் மற்றும் சிறைகளில் பத்து இலட்சத்துக்கும் மேற்பட்ட உய்குர் மக்கள் அடைக்கப்பட்டிருக்கிறார்கள் என்றும் சுமார் 10,000இற்கும் மேற்பட்ட உய்குர் இன மக்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற அதிர்ச்சி தகவலும் உண்டு.

அதேநேரம் இந்த முகாம்களில் மனித உரிமை மீறல்கள் நடைபெறுவதாகவும் மக்கள் சித்ரவதை செய்யப்படுவதாகவும் அமெரிக்கா தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது.

இந்த விவகாரத்தில் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே நீண்ட காலமாகவே மோதல் போக்கு நிலவி வருகிறது. உய்குர் குறித்து அமெரிக்கா கருத்து கூறும்போதெல்லாம், அமெரிக்கா தங்களது இறையாண்மையில் தலையிடுகிறது என்று சீனா கண்டித்து வருகிறது.

இந்த நிலையில் அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களால் சீனாவைத் தண்டிக்கும் விதத்திலான சட்டமொன்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத்துக்கு அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் ஒப்புதல் அளித்துக் கையெழுத்திட்டிருக்கிறார்.

இந்தச் சட்டத்துக்குக் கையெழுத்திட்டது குறித்து செய்தி வெளியிட்டிருக்கும் டிரம்ப், ‘இந்த சட்டம் மனித உரிமை மீறல்களைச் செய்பவர்களைப் பொறுப்பேற்க வைக்கும்’ என்று கூறியிருக்கிறார்.

இதேவேளை, இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டதற்குச் சீனா கடும் கண்டனத்தைத் தெரிவித்திருக்கிறது. இது குறித்து சீனா வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், உள்நாட்டு விவகாரத்தில் அமெரிக்கா தலையிடுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்திருக்கிறது.

வரலாறு முக்கியத்துவம் வாய்ந்த இந்த சட்டத்தின் மூலம், சீனாவில் நடைபெறும் சிறுபான்மையினர் மீதான தாக்குதலில் ஈடுபட்ட அதிகாரிகளுக்கு அமெரிக்காவால் தடை விதிக்க முடியும். சீனாவைத் தண்டிக்கும் வகையில் பொருளாதாரத் தடையும் விதிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது

Be the first to comment

Leave a Reply