கொரோனாவுக்கு புதிய மருந்து கண்டுபிடிக்கப்பட்டது: இங்கிலாந்து ஆராய்ச்சியாளர்கள் வெற்றி..!

கொரோனா நோய்த்தொற்றுக்கு ஆளாவோரை குணப்படுத்த, ‘டெக்சாமெத்தசோன்’ எனும் ஸ்டீராய்டு வகை மருந்தை பயன்படுத்த பிரிட்டனின் சுகாதாரத் துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

உலகையே இன்று வாட்டி வதைத்துவரும் கொரோனா வைரஸ் நோய்த்தொற்றுக்கு இதுதான் மருந்து என்று இதுநாள்வரை எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. இதன் காரணமாக, பெரும்பாலான நாடுகளில் கொரோனா தொற்றுக்கு ஆளாவோருக்கு கூட்டு மருந்து சிகிச்சையே அளிக்கப்பட்டு வருகிறது.

இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளில், மலேரியா காய்ச்சலுக்கு தரப்படும் ‘ஹைட்ராக்சி குளோரோகுயின்’ மாத்திரை கொரோனா சிகிச்சையில் முக்கிய பங்கு வகித்து வருகிறது. சில மாதங்களுக்கு முன் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், இந்தியாவை மிரட்டாத குறையாக இந்த மாத்திரையை கேட்டு பெற்றார்.

ஆனால், ‘ஹைட்ராக்சி குளோரோகுயின் மாத்திரை, கொரோனோ சிகிச்சையில் எதிர்பார்த்த பலனை அளிக்காததுடன், பக்கவிளைவுகளையும் அதிகமாக ஏற்படுத்துகிறது.

எனவே இந்த மாத்திரையை கொரோனா நோயாளிகளுக்கு கொடுக்க வேண்டாம். ஆராய்ச்சி பணிகளுக்கு மட்டும் பயன்படுத்தி கொள்ளலாம்’ என்று அமெரிக்க அரசு சில தினங்களுக்கு முன் அறிவித்திருந்தது.

இந்த நிலையில், ஸ்டீராய்டு வகை மருந்தான டெக்சாமெத்தசோனை கொரோனா நோயாளிகளுக்கு பயன்படுத்த பிரிட்டன் அரசு முடிவு செய்துள்ளது.

பிரிட்டனில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இதனை கொடுத்ததில் நல்ல பலன் கிடைத்துள்ளது. அதுவும் வென்டிலேட்டரில் சிகிச்சை பெறும் மூன்றில் ஒருவர் இந்த மருந்தினால் உயிர் பிழைத்துள்ளது ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது.

இங்கிலாந்தின் புகழ்பெற்ற ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இந்த ஆய்வை வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளனர். இதையடுத்து, கொரோனா நோயாளிகளுக்கு டெக்சாமெத்தசோன் மருந்தை பயன்படுத்த இங்கிலாந்து நாட்டின் சுகாதாரத் துறை முடிவு செய்துள்ளது.

மூலம் – பி. பி. சி

Be the first to comment

Leave a Reply