குழந்தை பிறக்கும்பொழுது குழந்தை நல வைத்திய நிபுணரின் பங்களிப்பு என்ன..!

New born baby - dailysri

இது பொதுவாகவே பெற்றோர்களுக்கு இருக்கின்ற ஒரு சந்தேகம் ஆகும்.
அண்மையில் நடைபெற்ற ஒரு குழந்தை பேற்றுக்கு நான் சென்றபொழுது அக்குழந்தையின் பெற்றோர்கள் என்னை சற்றும் எதிர்பார்க்கவில்லை என்பதால் இந்த தகவலை தருகின்றேன்.

உண்மையிலேயே குழந்தை பேறு என்பது ஒரு குடும்பத்தை பொறுத்தவரையில் மிகவும் மகிழ்ச்சிகரமான ஒரு விடயமாகும். பத்து மாதங்கள் கண்ணும் கருத்துமாக கர்ப்பப்பையினுள் வைத்துப் பார்க்கப்பட்ட குழந்தை முதன்முதலாக உலகத்தை பார்க்கும் அந்த நாள் ஒவ்வொரு பெற்றோராலும் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு நாளாகும்.

எனவே அக்குழந்தையின் தேக ஆரோக்கியம் பற்றி அறிந்து கொண்டு குழந்தைக்கு பாலூட்டும் முறை மற்றும் குழந்தையை பராமரிக்கும் முறை பற்றி பெற்றோர்களுக்கு அறிவுரை வழங்குவது குழந்தைநல வைத்தியரின் ஒரு கடமையாகின்றது.

கர்ப்ப காலத்தில் மகப்பேற்று வைத்தியரால் கர்ப்பிணித்தாய் பராமரிக்கப்படுகின்றார். இதன் பொழுது தாய் மற்றும் குழந்தையின் உடல் ஆரோக்கியம் என்பன முறையாக கவனிக்கப்படுகின்றன. அதாவது ஸ்கேனிங் செய்வதன் மூலம் குழந்தையின் வளர்ச்சி மற்றும் தொப்புள் கொடியின் அமைவிடம் என்பன கண்காணிக்கப்பட்டு குழந்தை பிறப்பதற்கான திகதி குறிக்கப்படுகின்றது.

ஆனாலும் குழந்தைகளுக்கு ஏற்படும் சகலவிதமான குறைபாடுகளையும் சாதாரண ஸ்கேனிங் முறைமூலம் கண்டுபிடிப்பது சற்று கடினம் ஆகும்.

குழந்தை பெறப்படும் முறையானது பல்வேறுபட்ட காரணிகளால் தீர்மானிக்கப்படுகின்றது. அதாவது சுகப்பிரசவமா அல்லது சத்திரசிகிச்சை மூலம் குழந்தை பிறக்கப்பட வேண்டுமா என்ற தீர்மானங்கள்.

அவ்வாறு குழந்தைகள் பெறப்படும் பொழுது அவர்கள் பிறந்த பின்னர் அவர்களுடைய உடல் ஆரோக்கியம் சம்பந்தமாக பரிசோதனைகளை மேற்கொள்வது அவசியமாகும். அதேபோல் தாய்ப்பால் ஊட்டுவது சம்பந்தமாகவும் பிறந்த குழந்தையை பராமரிப்பது சம்பந்தமாகவும் தாய்க்கு சாதாரணமாக எழும் சந்தேகங்களை தீர்த்து வைப்பதும் மிகவும் முக்கியமானது.

ஏனென்றால் இவ்வாறான சந்தர்ப்பங்களில் எழுந்தமானமாக கொடுக்கப்படும் சில அறிவுரைகளினால் சிலவேளைகளில் எதிர்மறையான விளைவுகளும் ஏற்படுவதுண்டு. அதாவது குழந்தையின் தொப்புள் கொடி பராமரிப்பு மற்றும் குழந்தையை எப்பொழுது, எவ்வாறு குளிப்பாட்டுவது போன்ற அறிவுரைகள்.

அதேபோல் குழந்தையின் பரிசோதனையின் போது ஏதாவது வித்தியாசமான அறிகுறிகள் தென்படும் பொழுது அவருக்குரிய மேலதிக பரிசோதனைகளும் செய்யப்பட வேண்டும். உதாரணமாக ஸ்கேனிங் பரிசோதனை மற்றும் எக்கோ பரிசோதனை போன்றவை.

சில வேளைகளில் குழந்தைகள் அசாதாரணமாக முறையில் மஞ்சள் நிறமாக மாறும் பொழுது அதற்குரிய சிகிச்சை முறைகளும் காலதாமதமின்றி வழங்கப்பட வேண்டும். அதேபோல் குழந்தைக்கு விட்டமின் K வழங்கப்படுவது மற்றும் பிறந்தவுடன் கொடுக்கப்படும் BCG எனப்படும் தடுப்பு மருந்து கொடுக்கப்படுகின்றது என்பதையும் உறுதிப்படுத்த வேண்டும். தேவை ஏற்படும் பொழுது குழந்தைகளை சிறிது காலத்தின் பின்னர் மீண்டும் பரிசோதிக்க வேண்டிய தேவையும் ஏற்படலாம்.

இவற்றையெல்லாம் பார்த்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு குழந்தை நல வைத்தியரை சார்ந்தது. அதாவது 10 மாதங்களாக கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொள்ளப்பட்ட குழந்தை தேக ஆரோக்கியத்துடன் உள்ளது என்பதை உறுதிப்படுத்தும் பொறுப்பு எங்களை சார்ந்தது. ஏனென்றால் குழந்தைகளின் ஆரோக்கியம் நன்றாக பேணப்படும் பொழுதுதான் அவர்களால் சிறந்த ஆரோக்கியமான பெரியவர்களாக எதிர்காலத்தில் உருவாக முடியும்.

இதைத்தான் திருவள்ளுவர் “ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய்” என்று குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பு: இந்த ஆண்டின் ஆரம்பத்தில் பிறந்து சில நிமிடங்களில் எனது கைகளில் தவழ்ந்த குழந்தை இது. இவரின் சுபிட்சமான எதிர்காலத்திற்கு எனது வாழ்த்துவதோடு என்னை குழந்தை பேற்றுக்கு அழைத்த அவரின் தந்தைக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன்.

Dr. விஷ்ணு சிவபாதம்,
MBBS, DCH, MD Paediatrics
குழந்தைநல மருத்துவ நிபுணர்,
போதனா வைத்தியசாலை மட்டக்களப்பு.

Be the first to comment

Leave a Reply