பல்கலைக்கழக துணைவேந்தராக இராணுவ அதிகாரி..?

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு இராணுவ அதிகாரி ஒருவரை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ துணைவேந்தராக நியமிக்கப்பட உள்ளார் என்ற செய்தியில் உண்மை இல்லை என்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

நாட்டில் பல்வேறு உயர் பதவிகளுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவினால் இராணுவ உயர் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு வரும் நிலையில், கடந்த ஒரு வருட காலத்துக்கும் மேலாக வெற்றிடமாகவுள்ள யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்கும் விண்ணப்பங்கள் கோரப்பட்டு, கடந்த 9 ஆம் திகதியுடன் விண்ணப்பங்கள் நிறைவு செய்யப்பட்டுள்ள நிலையில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு ஒரு இராணுவ அதிகாரியை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ துணைவேந்தராக நியமிக்கப் போகிறார் என்று அரசல், புரசலாகச் செய்திகள் வெளிவந்திருந்தது.

இது பற்றி, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்கவிடம் நேரடியாகத் தொடர்பு கொண்டு வினவிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத் துணைவேந்தர் பதவிக்கு யாரெல்லாம் விண்ணப்பித்திருக்கிறார்கள்? ஒரு இராணுவ அதிகாரி துணைவேந்தராக வருவதற்கு வாய்ப்புகள் உள்ளதா? என்று அவரிடம் கேட்ட போது

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் வெற்றிடத்துக்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இப்போது சிரேஷ்ட பேராசிரியர் கந்தசாமி தகுதிவாய்ந்த அதிகாரியாக இருக்கிறார். புதிய துணைவேந்தர் ஒருவர் நியமிக்கப்படும் வரை அவரே துணைவேந்தராகச் செயற்படுவார்.

இராணுவ அதிகாரி ஒருவர் துணைவேந்தராக நியமிக்கப்படப்போகிறார் என்பதில் எந்தவித உண்மையும் இல்லை. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ கல்வித் துறை சார்ந்த விடயங்களில் மிகக் கவனமாகவே செயற்படுகிறார். அவர் ஜனாதிபதியாக வருவதற்கு முன்னர் ஹோமகமவில் அமைந்துள்ள மொரட்டுவ பல்கலைக்கழக தொழில்நுட்பவியல் நிலையத்திலும், கம்பஹாவில் அமைந்துள்ள களனி பல்கலைக்கழகத்தின் விக்கிரமராச்சி ஆயுர்வேத பயிற்சி நிலையத்திலும் முன்னாள் இராணுவ அதிகாரிகளே தகுதி வாய்ந்த அதிகாரிகளாக நியமிக்கப்பட்டிருந்தனர்.

ஜனாதிபதி பதவியேற்றவுடன் அவற்றில் மாற்றங்களைக் கொண்டுவந்தார். கலாநிதி சுனில் ஜெயந்த நவரட்ண மற்றும் சிரேஷ்ட பேராசிரியை ஜனித்தா லியனகே ஆகிய புலமைசார் கல்வியியலாளர்கள் அந்த இடங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதேபோலவே, யாழ்ப்பாண பல்கலைக்கழகத்துக்கும் உயர் கல்வித் தகுதியுடைய சாதாரண குடிமக்களான கல்வியியலாளர்களில் ஒருவரே துணைவேந்தராக வர முடியும். இராணுவ அதிகாரிகள் எவரும் துணைவேந்தராக வரவே முடியாது. தேர்தல் நெருங்கும் இவ் வேளையில் இத்தகைய வதந்திகள் குறித்து விழிப்பாக இருக்க வேண்டும் என்றார்.

Be the first to comment

Leave a Reply