ரஷ்யாவில் எண்ணெய்க்கசிவு; 12 கி மீ தூரத்திற்கு ஆபத்து பரந்தது..!

ஆர்டிக் பகுதியில் உள்ள ஆறு ஒன்றில் சுமார் 20,000 டன் டீசல் கசிந்ததை அடுத்து அவசரநிலையை பிறப்பித்து உத்தரவிட்டுள்ளார் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின்.

கடந்த வெள்ளியன்று ரஷ்யாவின் நோரில்ஸ்க் நகரத்துக்கு அருகிலுள்ள மின்னுற்பத்தி நிலையத்தில் இருக்கும் எரிப்பொருள் தொட்டி சேதமடைந்தபோது இந்த கசிவு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து மின்னுற்பத்தி நிலையத்தின் இயக்குநர் வியாசெஸ்லாவ் ஸ்டாரோஸ்டின் ஜூலை 31 வரை காவலில் எடுக்கப்பட்டுள்ளார். ஆனால் அவர் மேல் வழக்கு ஏதும் பதிவு செய்யப்படவில்லை.

உலகின் மிகப் பெரிய நிக்கல் மற்றும் பல்லேடியம் தயாரிப்பாளரான நோரில்ஸ்க் நிக்கல் நிறுவனத்தின் துணைநிறுவனத்துக்கு சொந்தமானதே இந்த மின்னுற்பத்தி நிலையம்.

இதுகுறித்து விசாரித்து வரும் சிறப்பு குழு, சுற்றுச்சூழல் மாசுபாட்டை ஏற்படுத்தியதற்காகவும், இந்த கசிவு குறித்து அதிகாரிகளிடம் இரண்டு நாட்கள் தாமதமாக தகவல் அளித்த அலட்சியத்திற்காகவும் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளது.

எரிப்பொருள் வைக்கப்பட்டிருந்த இடத்தின் தரைக்கடியில் ஏற்பட்ட விரிசலே இந்த எண்ணெய் கசிவுக்கு காரணம் என நம்பப்படுகிறது. நிலத்தடி உறைபனி மண்டலத்தில், அதாவது இரண்டு முதல் மூன்று ஆண்டுகளுக்கு தொடர்ந்து குளிர்ச்சியாக இருக்கும் மண்டலத்தில் இருக்கும் இந்த பகுதியில் தற்போது வெப்பம் வாட்டி வருகிறது.

இவ்வளவு பெரிய விபத்து குறித்த தகவல் அதிகாரிகளுக்கு மிகவும் காலதாமதமாக தெரிந்ததையடுத்து அதிபர் புதின் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

சம்பந்தப்பட்ட அமைச்சகத்துக்கு தகவல் கொடுக்கும்முன், மின்னுற்பத்தி நிலைய நிர்வாகம் இரண்டு நாட்களாக இந்த கசிவை சமாளிக்கும் பணியை மேற்கொண்டதாக அவசரநிலைக்கான அமைச்சர் யெவ்ஜெனி ஜினிச்செவ் புதினிடம் விளக்கம் அளித்துள்ளார்.

இந்த கசிவு நடந்த இடத்திலிருந்து சுமார் 12 கிலோமீட்டர் தொலைவு வரை அம்பார்நயா நதி சிவப்பு நிறமாக மாறியது.

விபத்து நடந்த இடத்திலிருந்து சுமார் 12 கிலோமீட்டர் தொலைவு வரை சென்ற எண்ணெய், அங்குள்ள அம்பர்னயா நதியை சிவப்பு நிறமாக மாற்றியது.

இந்த விவகாரம் தொடர்பாக காணொளி காட்சி வழியாக நடத்தப்பட்ட கூட்டத்தில், மின்னுற்பத்தி நிலையத்தின் நிர்வாகம் மீது அதிபர் புதின் விமர்சனங்களை முன்வைத்தார்.

“சம்பவம் நிகழ்ந்ததை அரசு முகமைகளுக்கு தெரிவிக்க ஏன் இரண்டு நாட்கள் ஆனது? நாங்கள் சமூக வலைதளங்களின் மூலம்தான் அவசர நிலையை அறிய வேண்டுமா?” என்று மின்னுற்பத்தி நிறுவனத்தின் தலைவர் செர்கெய் லிபினிடம் அவர் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார்.

மூக ஊடகங்களில் பகிரப்பட்ட தகவல் மூலமே இந்த எண்ணெய் கசிவு குறித்து தனக்கு தெரியவந்ததாக அந்த பிராந்தியத்தின் ஆளுநர் அலெக்ஸாண்டர் அஸ் புதினிடம் விளக்கமளித்தார்.

இந்த கசிவு சுமார் 350 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பை மாசுபடுத்தி இருப்பதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ஆனால் நோரில்ஸ்க் நிக்கல் நிறுவனமோ, இந்த விபத்து குறித்து சரியான நேரத்திலும் விதத்திலும் அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தப்பட்டதாக தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளதால் இந்த கசிவை சுத்தம் செய்ய மேலும் சில படைகள் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளன.

இது நவீன ரஷ்ய வரலாற்றில் இரண்டாவது பெரிய விபத்து என்று நம்பப்படுவதாக உலக வனவிலங்கு நிதியத்தின் நிபுணர் அலெக்ஸி நிஷ்னிகோவ் ஏஃப்பி செய்தி முகமையிடம் தெரிவித்தார்.

இந்த கசிவின் அளவு மற்றும் அந்த ஆறு அமைந்துள்ள அமைப்பையும் பார்க்கும்போது இதை சுத்தம் செய்வது கடினம் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த சம்பவத்தை 1989இல் அலாஸ்காவில் நடந்த எக்ஸான் வால்டிஸ் பேரழிவோடு கிரீன்பீஸ் என்னும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிறுவனம் ஒப்பிடுகிறது.

ஆர்டிக் பகுதியில் இதுபோன்ற ஒரு விபத்து ஏற்பட்டது இல்லை என்கிறார் ரஷ்ய சுற்றுச்சூழல் கண்காணிப்பு நிறுவனத்தின் துணை தலைவர் ஓலேக் மிட்வோல்.

இதை சுத்தம் செய்ய 100 பில்லியன் ரூபல் செலவாகும் எனவும் ஐந்து முதல் 10 வருடம் ஆகலாம் எனவும் அவர் கூறியுள்ளார்.

நோரில்ஸ்க் நிக்கல் நிறுவனம் எண்ணெய் கசிவு பிரச்சனையில் சிக்குவது இது முதல்முறையல்ல. 2016இல் இது போன்றதொரு சம்பவம் நடந்ததற்கு அந்த நிறுவனமே பொறுப்பேற்று கொண்டது.

இந்த நிலையில், நிலப்பரப்பில் கசிந்துள்ள எண்ணெய்யை எரித்து அப்புறப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள ரஷ்யாவின் இயற்கை வள பாதுகாப்புத்துறை அமைச்சர், அந்த எண்ணெயை நீர்க்க செய்யலாம் என கூறியுள்ளார்.

Be the first to comment

Leave a Reply