கோட்டாபய அரசுக்கு ஆதரவு – முடிவெடுத்து தமிழ்தேசிய கூட்டமைப்பு..! தடாலடி..!

கோட்டாபய அரசுக்கு ஆதரவு – முடிவெடுத்தது தமிழ்தேசிய கூட்டமைப்பு

தமிழ் மக்களின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வுகள் கிடைக்கும் வரைக்கும் அரசுடன் தொடர்ந்து பேசுவது எனவும், தமிழர்சார் விடயங்கள் தொடர்பில் அரசுக்கு ஒத்துழைப்பு வழங்குவது எனவும் இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முடிவெடுத்துள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களுக்கிடையிலான கூட்டம், இரண்டாவது நாளாக கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் இல்லத்தில் (29)வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

இரா.சம்பந்தன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, புளொட் தலைவர் த.சித்தார்த்தன் மற்றும் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர். ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. அவர் உடல்நலக் குறைவால் இதில் கலந்துகொள்ளவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

மேற்படி கூட்டத்தில் சமகால நிலைவரங்கள் தொடர்பில் பேசப்பட்டன. பிரதமர் மஹிந்த ராஜபக்சவுடன் கூட்டமைப்பினர் அண்மையில் நடத்திய சந்திப்பு, அதில் தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை, காணி விடுவிப்பு உள்ளிட்ட பிரதமரால் வழங்கப்பட்ட வாக்குறுதிகள், நாடாளுமன்றத் தேர்தலுக்கான கூட்டமைப்பின் விஞ்ஞாபனம் தயாரித்தல், இலங்கைக்கான புதிய இந்தியத் தூதுவர் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுடன் தொலைபேசியில் பேசிய விடயங்கள், புதிய இந்தியத் தூதுவருடன் கூட்டமைப்பினர் நேரில் சந்திப்பு நடத்தவுள்ளமை, அந்தச் சந்திப்பில் பேசப்பட வேண்டிய விடயங்கள் எனப் பல விவகாரங்கள் தொடர்பில் இந்தக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டன.

ஒருகட்டத்தில் சிங்கள ஊடகம் ஒன்றுக்கு கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் வழங்கிய செவ்வி தொடர்பிலும், அதில் தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆயுதப் போராட்டம் தொடர்பில் அவர் தெரிவித்த கருத்துக்களினால் எழுந்துள்ள சர்ச்சைகள் குறித்தும் பேசப்பட்டன. இதன்போது சுமந்திரன் தனது பக்க நியாயத்தை விளக்கினார். அதேவேளை, சம்பந்தனும் மாவை சேனாதிராஜாவும் தங்கள் நிலைப்பாடுகளை இதன்போது தெரிவித்தனர்.

இதேவேளை, கொரோனாத் தாக்கம் கட்டுப்பாட்டுக்குள் வந்தவுடன் ஜனாதிபதி – பிரதமர் தலைமையிலான அரசுடன் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகள் காண்பது தொடர்பில் நேரில் பேசுவது எனவும் நேற்றைய கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது

Be the first to comment

Leave a Reply