மண்கடத்தல்காரரை தடுத்ததால் தாக்கப்பட்டவர்களை சென்று பார்வையிட்ட சீனித்தம்பி..!

மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள வாகனேரி கிராமத்தில் கடந்த பல வருடங்களாக சட்டவிரோத மண்கடத்தல் நடைபெற்று வந்துள்ளது. இவ்விடயமாக பல தடவைகள் மக்கள் பொலிசாரிடம் முறையிட்டுள்ளனர்.

ஆனால் வாகனேரி பகுதியில் சட்டவிரோத மண்கடத்தலில் ஈடுபட்ட முஸ்லிம் நபர்கள் சிலரை தமிழ் மக்கள் சிலர் தடுத்துள்ளனர். இவ்வேளை சட்டவிரோத மண் அகழ்வில் ஈடுபட்ட குழு வாகனேரி மக்களை பலவாறு தாக்கியுள்ளது.

அதிலும் ஒருவர் மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், மேலும் இருவருர் வாழைச்சேனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வாகனேரியில் மண் அகழ்வைத் தடுக்க முற்பட்ட மக்கள் மிகவும் காட்டுமிராண்டித்தனமான முறையில் தாக்கப்பட்டுள்ளனர்.

இதைக் கேள்வியுற்ற மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் பாதிக்கப்பட்டவர்களை வாழைச்சேனை வைத்தியசாலையில் சென்று பார்வையிட்டதுடன், இவர்களைத் தாக்கியவர்களை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துமாறு வாழைச்சேனை உதவிப் பொலிஸ் அத்தியட்சகரிடம் கோரியுள்ளார்.

இதேவேளை, வாழைச்சேனை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஏறாவூரிலிருந்து விசேட பொலிஸ் குழுவை அனுப்பி சம்பந்தப்பட்ட சிலரை கைது செய்ததுடன், மோட்டார் வாகனம், உழவு இயந்திரங்கள் போன்றவற்றை கைப்பற்றி வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் நிறுத்தியுள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரனிடம் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் சார்பாக பொலிசாரின் உதவியுடன் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்கு ஏற்பாடு செய்யவுள்ளதாகம், வாகனேரி உட்பட்ட பகுதியில் சட்டவிரோத மண் அகழ்வுக்கு இடமளிக்காத வகையில் நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாகவும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்தார்.

Be the first to comment

Leave a Reply