செப்டம்பருக்கு முன் தேர்தல் கனவு தவிடுபொடியாகும் சந்தர்ப்பம்..!

நாட்டின் தற்போதைய நிலைமையில் நாடாளுமன்றத் தேர்தல் இப்போதைக்கு அவசியமில்லை. இந்தநிலையில், நாடாளுமன்றத்தைக் கலைத்த ஜனாதிபதியின் வர்த்தமானி அறிவித்தல் அரசமைப்பின் பிரகாரம் ஜுன் மாதம் 2 ஆம் திகதியுடன் காலாவதியாகின்றது. அன்றிலிருந்து நாடாளுமன்றத்தை மீளக் கூட்டும் அதிகாரம் சபாநாயகர் வசமாகின்றது.”

– இவ்வாறு முன்னாள் பிரதமரான ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்களைக் கொழும்பு, கொள்ளுப்பிட்டியிலுள்ள தனது இல்லத்துக்கு நேற்று அழைத்த அதன் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நீண்ட நேரம் அவர்களுடன் கலந்துரையாடினார். இதன்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“உலக பொருளாதார சுட்டெண்ணுக்கமைவாக இலங்கை படுமோசமானதொரு நிலையிலேயே உள்ளது. எனவேதான் நாட்டின் உண்மை நிலையைத் தெரியப்படுத்துமாறு அரசிடம் கோரினேன்.

பாரியதொரு கடன் பொறிக்குள் சிக்கிவிட்டுள்ளோம். சுற்றுலாத்துறை மற்றும் ஆடை உற்பத்தி என்பவற்றின் மீது மாத்திரம் நம்பிக்கை வைத்து செயற்பட முடியாது. உரிய திட்டமொன்று அவசியம் .

அந்நியச் செலாவணியை அதிகரிக்க புதிய வாய்ப்புகள் தேடப்பட வேண்டும். இதனை மையப்படுத்திய வெளிவிவகாரக் கொள்கையொன்று அவசியமாகவுள்ளது.

நாடாளுமன்றத்தைக் கலைத்து வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பு காலாவதியாகாது என்றே சட்டமா அதிபர் கூறுகின்றார். ஆனால், எதிர்வரும் ஜுன் மாதம் 2ஆம் திகதியுடன் அரசமைப்பின் அடிப்படையில்   நாடாளுமன்றத் தேர்தலுக்காக சபையைக் கலைத்த ஜனாதிபதியின் குறித்த வர்த்தமானி அறிவிப்பு காலாவதியாகிவிடும். ஏனெனில் ஜனாதிபதியின் வர்த்தமானி அறிவித்தல் மூன்று மாதங்கள் மாத்திரமே செல்லுபடியாகும். அன்றிலிருந்து நாடாளுமன்றத்தைக் கூட்டுவதற்கான அதிகாரம் சபாநாயகருக்குச் செல்கின்றது.

நாட்டின் தற்போதைய நிலைமையில் நாடாளுமன்றத் தேர்தல் இப்போதைக்கு அவசியமில்லை. எனவே, ஜூன் 2ஆம் திகதியுடன் நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்டும் அதிகாரம் சபாநயகருக்கு உள்ளது என்ற கட்டளையை உயர்நீதிமன்றத்தின் ஊடாகப் பெற்றுக்கொள்ளவே நாம் எதிர்பார்க்கின்றோம்” – என்றார்

Be the first to comment

Leave a Reply