விமானத்தில் சமூக இடைவெளி தேவையில்லை! வெளிநாட்டில் இருந்து வருபவர்கள் 14 நாட்கள் தனிமை: சிடிசி அறிவுறுத்தல்..!

விமானத்தில், சமூக இடைவெளி தேவையில்லை என்று அமெரிக்காவின் நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக உலகின் பல்வேறு நாடுகளில் விமான சேவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

தற்போது கொரோனாவின் பாதிப்பு மெல்ல, மெல்ல ஒரு சில நாடுகளில் குறைந்து வருவதால், அங்கு விமான சேவை துவங்கப்படவுள்ளது.

இதனால், விமானங்களில் பயணிக்கும் பயணிகளின் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுந்தது. இதையடுத்து, விமானப் பயணம் பாதுகாப்பானது என்றும், பயணிகள் விமானத்தினுள் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் அமெரிக்க நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் (சிடிசி) தன் வழிகாட்டுதல் நெறிமுறைகளில் அறிவுறுத்தியுள்ளது.

அதில், விமானத்தில் பின்பற்றப்படும் காற்று சுத்திகரிப்பு மற்றும் சுழற்சி முறையால் வைரஸ் மற்றும் கிருமிகள் பரவல் தடுக்கபடுவதாக சிடிசி கூறியுள்ளது.

மேலும், பயணிகள் அமரும் இருக்கைகளில் இரண்டு இருக்கைகளுக்கு இடையில் ஓர் இருக்கை இடைவெளி விடுவதன் மூலம் தனிமனித இடைவெளியை சாத்தியமாக்கலாம்.

ஆனால், விமானத்தில் போதுமான பாதுகாப்பு வசதிகள் இருக்கும் பட்சத்தில் அதற்கான தேவையும் இல்லை. வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகள், 14 நாள்களுக்கு தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று சிடிசி தெரிவித்துள்ளது.

விமானப் பயணம் பாதுகாப்பானது என்று சிடிசி கூறியிருந்தாலும் மக்கள் முடிந்தவரை பயணங்களை குறைத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

ஏனெனில், பாதுகாப்பான பயணத்திற்காக நீண்ட நேரத்தை விமான நிலையங்களிலேயே பயணிகள் செலவழிக்கவேண்டியுள்ளது.

இதனால், அதிக கூட்டம் சேரும் விமான நிலையங்களில் சமூக இடைவெளி கேள்விக்குறியாகும் அபாயம் உள்ளது. இதனால் நோய்த்தொற்று பரவும் ஆபத்தும் உள்ளது.

பயணிகள் விமானம் மட்டுமன்றி சரக்கு விமானங்களும் தொடர்ச்சியாக நோய்த் தடுப்பு மற்றும் சுகாதார நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என சிடிசி அறிவுறுத்தியுள்ளது.

கொரோனா பரவலில் பின்பற்றவேண்டிய நடைமுறைகள் பற்றிய வழிகாட்டுதல்களைக் கடந்த மார்ச் மாதத்திலும், மீண்டும் மே மதத்திலும் சிடிசி வெளியிட்டது.

விமானப் பயணம் மேற்கொண்ட ஒருவருக்கு நோய்த்தொற்று இருக்கும் பட்சத்தில், மற்றவர்களிடமிருந்து தனிமைப்படுத்த வேண்டும். (2 மீற்றர் அல்லது 6 அடி தூரத்திற்கு) மற்றும் நோய்வாய்ப்பட்ட நபருக்கு சேவை செய்ய ஓர் உறுப்பினரை நியமிக்க வேண்டும். நோயாளிக்கு முகக்கவசம் வழங்க வேண்டும் என்று சிடிசி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Be the first to comment

Leave a Reply