நீண்ட நேரம் உயிருக்கு போராடிய மாடு: அசமந்தபோக்குடன் செயற்பட்ட கால்நடை வைத்திய அதிகாரிகள்..! மக்கள் விசனம்..!

வவுனியா நகரில் விபத்துக்குள்ளாகி நீண்ட நேரமாக உயிருக்கு போராடிய பசு மாட்டினை காப்பாற்றாது கால்நடை வைத்திய அதிகாரிகள் அசமந்த போக்குடன் செயற்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

வவுனியா, பூட்சிற்றி முன்பாக தாய் பசு ஒன்று இரவு விபத்துக்குள்ளான நிலையில் காயத்துடன் வீதியோரத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது. அதன் கன்று அதன் அருகில் நின்று தாயை நினைத்து தவித்துக் கொண்டிருந்தது.

இதன்போது அங்கு சென்ற நகரசபை உறுப்பினர் பி.யானுஜன் குறித்த மாட்டினை பார்வையிட்டு இது தொடர்பில் வவுனியா கால்நடை வைத்தியர்களிடம் தெரியப்படுத்தியிருந்தார்.

அவர்கள், உரிமையாளர் வந்தால் மட்டுமே மாட்டிற்கு சிகிச்சையளிக்க முடியும் எனத் தெரிவித்து அலட்சியப் போக்குடன் பதிலளித்துள்ளதாக தெரியவருகிறது என எமது செய்தியாளர் தெரிவித்தார்.

வவுனியா பொலிஸாருக்கு தெரியப்படுத்தியதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த வவுனியா போக்குவரத்து பொலிஸார் மாட்டினை குணப்படுத்த முடியும் என்பதை அறிந்து கொண்டு அதற்கு சிகிச்சையளிக்குமாறு கால்நடை வைத்திய அதிகாரியிடம் மீண்டும் தொலைபேசியில் தெரிவித்துள்ளனர்.

ஆனால் உரிமையாளர் இல்லாமல் வர முடியாது எனவும் மருந்து அவர்கள் வங்கி வந்தால் சிகிச்சையளிக்கலாம் எனவும் கால்நடை வைத்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக தெரியவருகிறது.

இதனையடுத்து பொலிஸார் குறித்த மாட்டின் உரிமையார் யார் என்பதை தேடி அவர்களுக்கு, நகரசபை உறுப்பினர் மற்றும் பொது மக்களின் துணையுடன் தெரியப்படுத்தினர்.

சம்பவம் அறிந்து அங்கு வந்த உரிமையாளர் மாட்டினை மீட்டு கால்நடை வைத்தியரிடம் கொண்டு சென்று காட்டினர்.

அப்போது அவர்களால் எழுதிக் கொடுக்கப்பட்ட மருந்தைப் பெற்று வந்து கால்நடை வைத்தியரிடம் கொடுத்தையடுத்து மாட்டிற்கு சிகிச்சையளிக்கப்பட்டது.

கால்நடை வைத்தியர்களிடம் தெரியப்படுத்தி சுமார் 2.30 மணித்தியாலம் கடந்த நிலையில் உரிமையாளர் வந்த பின்னரே குறித்த மாட்டிற்கு சிகிச்சையளிக்கப்பட்டு காப்பாற்றப்பட்டதாக தெரியவருகிறது

Be the first to comment

Leave a Reply