வர்த்தமானியை திரும்ப பெறும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இல்லை: சட்டமா அதிபர் அதிரடி..!

நாடாளுமன்றத்தை கலைத்து ஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலை நீக்கும் அதிகாரம் அரசியலமைப்பு சட்டத்தில் ஜனாதிபதிக்கு வழங்கப்படவில்லை என சட்டமா அதிபர் உயர் நீதிமன்றத்தில் இன்று 26 தெரிவித்துள்ளார்.

கலைக்கப்பட்ட மாகாணசபையை மீண்டும் கூட்டும் அதிகாரம் மாத்திரமே ஜனாதிபதிக்கு அரசியலமைப்புச் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ளது என சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் இந்திக தெமுனி டி சில்வா உயர் நீதிமன்றத்தில் கூறியுள்ளார்.

இதனால், மனுதார்கள் கோரும் நிவாரணத்தை வழங்க முடியாது என்பதால், மனுக்களை விசாரிக்காது அவற்றை தள்ளுபடி செய்யுமாறும் சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் குறிப்பிட்டுள்ளார்.

ஜூன் 20ஆம் திகதி பொதுத் தேர்தலை நடத்துவது மற்றும் நாடாளுமன்றத்தை கலைத்து ஜனாதிபதி வெளியிட்டுள்ள வர்த்தமானி அறிவித்தல் ஆகியவற்றை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் இன்று (26) 6ஆவது நாளாகவும் விசாரணைக்கு எடுக்கப்பட்டன.

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, புவனேக அலுவிகார, சிசிர டி ஆப்ரூ, பிரியந்த ஜயவர்தன, விஜித் மலல்கொட ஆகிய ஐந்து நீதியரசர்கள் அமர்வு இந்த மனுக்களை விசாரித்து வருகிறது.

சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் மேலும் வாதங்களை முன்வைத்துள்ளதுடன் நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பான சட்டத்திற்கு அமைய அரச விடுமுறை தினங்களில் வேட்பு மனுக்களை பெற்றுக் கொள்வதில் சட்ட ரீதியான தடைகள் இல்லை என்பதை வழக்கு தீர்ப்புகளை மேற்கோள்காட்டி சுட்டிக்காட்டியுள்ளார்.

மனுதார்கள் கோரியுள்ளது போல் பொதுத்தேர்தலுக்காக வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டமை சட்டவிரோதமானது என தீர்ப்பளித்தால், புதிதாக வேட்புமனுக்களை கோர சட்டத்தில் இடமில்லை எனவும் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் குறிப்பிட்டுள்ளார்.

Be the first to comment

Leave a Reply