விடுதலைப்புலிகளை அடித்த ஸ்ரீலங்கா இராணுவ தளபதியை, அதே ஸ்ரீலங்கா இராணுவம் அடித்து இழுத்து போன கதை..!

(நூல் முன்னோட்டம்)

2010 ஆம் வருடத்திலே எங்களது பொது வேட்ப்பாளராக சரத் பொன்சேகா போட்டியிட்டு வெற்றிபெறவில்லை.

ஆனால் அந்த தோல்வியுடன், மீண்டும் திரும்பி ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரியாக வாழ விரும்பாத அளவிற்கு அவருக்குள் அரசியல் புகுந்துவிட்டது.

2010 பெப்ரவரியில், அவர் தேர்தல் காலத்தில் பயன்படுத்திய, கொழும்பு ரோயல் கல்லூரி அருகில் அமைந்துள்ள அலுவலக கட்டிடத்தின் மேல் மாடியில், தனது அரசியல் எதிர்காலத்தை தீர்மானிப்பதற்கான சில கட்சி தலைவர்களை அழைத்து சரத் பொன்சேகா ஒரு கலந்துரையாடலை நடத்தினார்.

ஆக மூன்று கட்சிகளைத்தான் அழைத்திருந்தார். ஜேவீபி, ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ், ஜனநாயக மக்கள் முன்னணி.

அழைப்பை ஏற்றுக்கொண்ட நான் அந்த ரோயல் மாவத்தை மேல் மாடி அறைக்குள் நுழையும் பொழுது, ஜேவிபியின் அன்றைய தலைவர் சோமவன்ச அமரசிங்க, எம்பி சுனில் ஹந்துன்நெத்தி, நண்பர் ரவுப் ஹக்கீம் ஆகியோர் அமர்ந்திருந்தனர்.

என்னை வரவேற்ற பொன்சேகா கலந்துரையாடலை ஆரம்பித்தார்.

பின்னாளில் பொன்சேகா மீதான வழக்கில் அரசாங்கம் கூறியதை போல, அந்த கலந்துரையாடல் அரசாங்கத்தை சதி செய்து கவிழ்க்கும் அரச விரோத கலந்துரையாடல் அல்ல.

உண்மையிலேயே அரசாங்கம் சொன்னதை போல, சதி செய்து அரசாங்கத்தை தூக்கி எறியும் அந்த இரகசிய கலந்துரையாடலில் கலந்துகொண்டோம் என அன்றைய ராஜபக்ச அரசாங்கம், என்னையும், ரவுபையும், சோமவன்சவையும் கைது செய்யும் என்றும் நான் நினைத்தேன்.

ஆனால் அப்படி நடக்கவில்லை.

உண்மையில் எமது எதிரணியின் பிரதான கட்சியான ஐதேக தலைவர் ரணில் விக்ரமசிங்கவுடன் தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி கட்டத்தில் சரத் பொன்சேகா முரண்பட்டுக்கொண்டார். (அது வேறு கதை பிறகு கூறுகிறேன்!).

அடுத்து வரும் பொது தேர்தலில் எப்படி நாங்கள் பொது எதிரணியாக ஐதேகவுடன் கூட்டாக போட்டியிடுவது என்பதுபற்றியே சரத் பேசினார்.

அந்த கலந்துரையாடலின் போது பொன்சேகாவின் செயலாளர் சேனக சில்வாவும் வந்து அமர்ந்துகொண்டார். ஒரு அரைமணித்தியாலம் கடந்திருக்கும்.

திடீரென எந்தவித முன் அனுமதியும் இன்றி ஒரு இராணுவ அதிகாரி சீருடையுடன் அந்த அறையின் கதவை திறந்துகொண்டு உள்ளே வந்தார். தனியாகத்தான் வந்தார். கையில் ஆயுதம் எதுவும் இருக்கவில்லை.

அவரது பெயர் மானவடு என பிறகு அறிந்தேன். அவர் உள்ளே வந்த விதம் அசந்தர்ப்பமாக இருந்தாலும் கூட, பொன்சேக்காவுடன் தொடர்புடைய ஒரு ராணுவ அதிகாரி அவருடன் கதைப்பதற்காக வந்தார் என நான் நினைத்தேன்.

ஆனாலும் அவரில் ஒரு பதட்டம் தெரிந்தது. வந்தவுடன் அவர் எங்கள் எல்லோரையும் பார்த்து, “Please go out of the room” (தயவு செய்து அறையை விட்டு வெளியேருங்கள்!) என பதட்டமாக கூறினார்.

அதில் தெளிவில்லாததால் அவரை பார்த்து நான் கேட்டேன், “What? Tell again” (என்ன, மீண்டும் சொல்லுங்கள்?) என்று. அவர் திரும்பவும் முதலில் சொன்னதையே சொன்னார்.

நான் சிங்களத்தில் அவருக்கு பதில் கூறினேன்.”உங்களுக்கு நான் யாரென்று தெரியுமா? நான் மனோ கணேசன் எம்பீ, இவர் ரவுப் ஹக்கீம் எம்பீ, இவர்கள் சுனில் ஹந்துந்நெத்தி எம்பீ மற்றும் ஜேவீபி தலைவர் சோமவன்ச அமரசிங்க.”

இப்படி விளக்கமாக கூறியும், அவர் ஏனோ ஆங்கிலத்தை கைவிடவில்லை.

பொன்சேகாவை நோக்கி கையை நீட்டிக்கொண்டு, “I come to arrest him” (அவரை கைது செய்ய வந்துள்ளேன்!) என்று உடைந்த பேச்சுவழக்கு ஆங்கிலத்தில் கூறினார்.

நானும் சிங்களத்தை விடவில்லை.”அதோ அவர் அங்கே இருக்கின்றார், பேசிக்கொள்ளுங்கள்” என்றேன்.

இவை அனைத்தும் நிகழ சில வினாடிகள் மட்டுமே சென்றன.

நிலைமையை புரிந்த கோப கணல் சரத் பொன்சேகா, “என்னை அரெஸ்ட் செய்ய நீங்கள் யார்?” என்று கேட்டார்.

சரத் பொன்சேகாவை நெருங்கிய மானவடு “சார், எங்களுடன் ஒத்துழையுங்கள். எங்களுக்கு மேலிடத்து உத்தரவு. உங்களை கைது செய்து கொண்டு செல்ல வேண்டும்.” என்றார்.

இப்பொழுது மானவடுவிற்கு சிங்களம் வந்தது.

பொன்சேகா ஆத்திரத்துடன் கூக்குரல் இட்டார்.

“மேலிடத்து உத்தரவு?” (இந்த இடத்திலே அவர் ஒரு இராணுவ ஸ்டைல் கெட்ட வார்த்தையை பயன்படுத்தியதாக ஞாபகம் வருகிறது!) “நான் இப்பொழுது ராணுவத்தில் இல்லை. நான் சிவில் மனிதன். போய் பொலீசை கூட்டி வாருங்கள்.” என்றார்.

செய்வதறியாத மானவடு திரும்பி பார்த்து, கதவிற்கு பக்கத்தில் நின்றிருந்த இன்னொரு ராணுவ அதிகாரியை அழைத்தார்.

விரைவாக உள்ளே வந்த அந்த அதிகாரி சரத் பொன்சேகாவின் பக்கத்திலே போய் தன் கையில் இருந்த ஒரு கடதாசியை சிங்களத்தில் வாசிக்க தொடங்கினார்.

அது ஒரு இராணுவ குற்ற பத்திரிகை என நான் நினைத்தேன். அது எனக்கு முழுமையாக விளங்கவில்லை. ஆனால் அதில் பல்வேறு குற்றச்சாட்டுகள் இருந்ததாக எனக்கு புரிந்தது.

அந்த அதிகாரி பெரும் கலவரத்திற்கு உள்ளாகி இருந்தார். அவரது கைகள் நடுங்கின. வாயில் வார்த்தைகள் சரியாக வரவில்லை.

அந்த ராணுவ அதிகாரிக்கு நேற்று வரை கட்டளையிட்ட தளபதிக்கு எதிராக, குற்றப்பத்திரிகை வாசிப்பதில் தடுமாற்றம் இருந்திருக்கலாம்.

இச்சந்தர்ப்பத்தில், அங்கே அமர்ந்திருந்த சேனக சில்வா தனது எதிர்ப்பை வெளிப்படுத்தி ஏதோ சொன்னார்.

அதனால் கோபமடைந்த மானவடு அறைக்கு வெளியே நின்ற படையினர் சிலருக்கு ஆணையிட்டார்.

கதவுக்கு வெளியே, அங்கே இன்னும் நிறைய ராணுவ வீரர்கள் ஆயுதங்களுடன் நின்றார்கள்.

“இவன் தான் அடுத்தவன். இவனையும் பிடியுங்கள்.” என்று கூறி சேனக சில்வாவின் இரண்டு கைகளையும் பின்புறமாக இறுக்கி, கழுத்திலே கையை வைத்து, உள்ளே வந்த இராணுவ வீரர்கள் இருவர் சேனகவை இழுத்து சென்றனர்.

திரும்பவும் மானவடு இப்பொழுது உரத்த குரலில்”சார், வாங்க சார் வாங்க!” என்று பொன்சேகாவை அழைத்தார்.

அப்பொழுதும் சரத் விடாப்பிடியாக”நான் சொன்னது உமக்கு விளங்கவில்லையா? போய் பொலீசாரை கூட்டிக்கொண்டு வா!” என கூச்சலிட்டார். (மீண்டும் இராணுவ ஸ்டைல் கெட்ட வார்த்தை!)

ஆமாம் “போலீசாரை கூட்டி வாருங்கள்” என்று ரவூப் ஹக்கீம் இடைமறித்து சொன்னார்.

ஒரு கணம் திகைத்து நின்ற மானவடு உடனடியாக சுதாரித்துக்கொண்டு தம் கையில் இருந்த கைபேசியை அழுத்தியபடி வெளியே சென்றார்.

அறைக்கு வெளியே அவர் யாருடனோ உரையாடுவது எமக்கு கேட்டது. இந்த அறையில் நிலவிய நிலைமையை விளக்கி அவர் மேலிடத்து ஆணையை பெறுகின்றார் என நினைத்தேன்.

சற்று நேரத்தில் திரும்பி மானவடு வேகமாக உள்ளே வந்தார். இப்போது அவரது தோற்றத்தில் மாற்றம் தெரிந்தது. “சார்” என்ற கெளரவம் இருந்ததாக தெரியவில்லை.

அவருக்கு பின்னாலே பெருந்தொகையான ஆயுதம் தரித்த இராணுவ வீரர்கள் அந்த மிக பெரிதல்லாத அறைக்குள்ளே வந்தார்கள்.

மானவடுவிற்கு மேலிடத்தில் இருந்து, கடும் உத்தரவோ அல்லது கடும் எச்சரிக்கையோ கிடைத்திருக்கிறது என நான் சுலபமாக ஊகித்துக்கொண்டேன்.

“நீர் அவரை இழுத்துக்கொண்டு வராவிட்டால், உமக்கு மேலே இன்னொருவரை அனுப்பி அவரையும், உம்மையும் இழுத்துவர வேண்டி வரும்.” என்று எச்சரிக்கை கிடைத்ததோ தெரியவில்லை.

பொன்சேகா கோபமடைந்த சிங்கத்தை போல தடுமாறி உரும ஆரம்பித்தார். போலீசாரை தவிர வேறு எவரிடமும் தான் சரணடைய மாட்டேன் என்று திரும்ப திரும்ப கூறினார்.

அறையில் நிலைமை மோசமடைந்தது.

இதை கண்ட, ராணுவத்தை பற்றி நன்கு தெரிந்தாலோ என்னவோ தெரியவில்லை, முன்னாள் ஆயுத போராளிகளான சரத் பக்கத்தில் அமர்ந்திருந்த, ஜேவீபி தலைவர் சோமவன்சவும், சுனில் எம்பீயும் தமது இருக்கையில் இருந்து எழுந்தார்கள்.

வேகமாக நானும், ரவுப்பும் அமர்ந்திருந்த அகன்ற இருக்கையில் அமர்ந்துகொண்டார்கள்.

இந்த சம்பவத்தின் போது அவர்கள் இருவரும் எதுவும் பேசவே இல்லை.

மானவடுவின் கட்டளைப்படி சுமார் பத்து பேர்வரை வீரர்கள், தமது ஆயுதங்களை மற்றவர்களிடம் கையளித்துவிட்டு சரத் பொன்சேகாவை அவரது இருக்கையில் இருந்து எழுப்பி இழுத்துக்கொண்டு செல்ல முயன்றனர்.

பொன்சேகா “என் கிட்டே வர வேண்டாம், என் மேல் கைவைக்க வேண்டாம்.” என கடும் கூச்சல் போட்டார்.

இடையிலே ராணுவத்திற்கே உரிய நல்ல பல சுந்தர சிங்கள வார்த்தைகளையும் உதிர்த்தார். அவர் கண்களில் கனல் பறந்தது. முக்கியமாக அவமானம் தெரிந்தது.

அந்த இராணுவ வீரர்கள் அவரை இழுத்து செல்வதற்காக, பொன்சேகா மீது கையை வைத்த பொழுது குனிந்து தனது இருக்கையின் கீழே எதையோ தேடினார்.

அவர் இருக்கையின் கீழே ஒளித்து வைத்திருக்கும் துப்பாக்கியை தேடுகிறாரோ, அதை எடுத்து இவர்களை நோக்கி சுடப்போகிறாரோ, அதனால் அந்த அறையிலே துப்பாக்கி சண்டை நடக்கப்போகிறதோ, இதில் நாங்களும் பலியாக போகின்றோமோ என்று நான் வேகமாக நினைத்தேன்.

பின்னாளில் இது பற்றி பேசியபொழுது ரவுப் ஹக்கீம் தானும் அப்படிதான் நினைத்ததாக கூறினார்.

சோமவன்சவும் சுனிலும் கூட அப்படித்தான் நினைத்தார்கள் என்பது அப்போதே அவர்களின் முகங்களில் தெரிந்தது. அவர்கள் அனுபவசாலிகள்!

இறுதியில் ஆறடி உயரமுள்ள திடகாத்திரமான பொன்சேகாவை அவர்கள் இழுத்து சென்றனர்.

இரண்டு கைகளையும் இரண்டு கால்களையும் பலர் பிடித்துகொண்டார்கள்.

எனக்கு ஞாபகம் இருக்கும் வகையில் மானவடுவின் கை பின்புறமாக சரத் பொன்சேகாவின் கழுத்தை பிடித்துக்கொண்டிருந்தது.

திமிறிய சரத் பொன்சேகாவின் கால் பட்டு அங்கிருந்த இரும்பு அலுமாரியின் கொக்கி உடைந்தது. பல ஜன்னல் கண்ணாடிகள் நொறுங்கின.

அறையில் இருந்து இறுதியாக சரத்தின் கழுத்தில் கையை வைத்தபடி வெளியேறிய மானவடு, திரும்பி எங்களை பார்த்து”நீங்கள் இங்கேயே இருங்கள், வெளியே வர வேண்டாம்.” என்று கேட்டுக்கொண்டார்.

அந்த மேல் மாடி அறையில் இருந்த எமக்கு மாடிப்படி வழியாக கீழே இழுத்து செல்லப்பட்ட சரத் பொன்சேகாவின் கூக்குரல் கேட்டது.

எனக்கு அந்த சந்தர்ப்பம் நன்றாக ஞாபகம் இருக்கின்றது. இழுத்து செல்லப்படும் பொழுது அவர் தலையை திருப்பி எங்களை பார்த்தார்.

ஒரு வினாடி அவர் கண்களும் என் கண்களும் சந்தித்தன. அவரது கண்களில் தெரிந்தது கோபமா, துக்கமா, வெட்கமா என்று எனக்கு புரியவில்லை.

அந்நேரத்து அரசியல் சூழலில் கொழும்பிலும், நாட்டிலும் தமிழ் மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட அரச பயங்கரவாத கடத்தல், காணாமல் போதல், படுகொலைகள், ஆகியவற்றுக்கு எதிராக போராடிய முன்னணி போராளி, நான்.

இதனால், தென்னிலங்கை தீவிரவாதிகள் என் மீது “புலி” என்ற முத்திரையை குத்தி இருந்தனர்.

அப்படியானால் இங்கு என்ன நடக்கிறது?

புலிகளின் தலைவன் பிரபாகரனை தோல்வியடைய செய்து, கொன்று, விடுதலை புலிகளை நிர்மூலமாக்கி, நேற்று முன்தினம் வரை முழு நாட்டு சிங்கள மக்களாலும் தேசிய வீரன் என தோளில் சுமக்கப்பட்டு, உலகத்திலேயே மிக சிறந்த இராணுவ தளபதி என ராஜபக்ச சகோதரர்களாலே புகழப்பட்ட, போர் தளபதியை, அவர் தலைமை தாங்கிய அதே இலங்கை இராணுவ வீரர்கள், மிருகத்தை போல அடித்து இழுத்து சென்றனர்.

இங்கே என்னை சிந்திக்க வைத்த விசித்திரம் என்னவென்றால், இவர்களாலேயே “தமிழ் புலி” என்று பொய் குற்றம் சுமத்தப்பட்ட என் கண்களின் எதிரிலேயே, அதே புலிகளை துவம்சம் செய்த “சிங்கள ராணுவ” தளபதி சரத் பொன்சேகா இழுத்துச்செல்லப்படுகிறார்.

எனக்கு தோன்றிய இந்த எண்ணம், சரத் பொன்சேகாவிற்கு தோன்றியதோ எனக்கு தெரியவில்லை.

தோன்றினாலும், தோன்றாவிட்டாலும் கூட போர் வெறியர்கள் இதையிட்டு என்றாவது ஒருநாளாவது வெட்கப்படத்தான் போகின்றார்கள்.

இருப்பினும் இந்நிகழ்வு எனக்கு சந்தோசத்தை ஏற்படுத்தவில்லை.

எனக்கு பொன்சேகா மீது அனுதாபம் தான் ஏற்பட்டது. நான் புலி அல்லவே. புலியாக இருந்திருந்தால் ஒருவேளை நான் சந்தோசப்பட்டிருக்கலாம்.

நான் இலங்கையன் என்ற முறையிலேயே கவலைப்பட்டேன்.

மானவடு குழுவினர் பொன்சேகாவை கைது செய்வதற்காக எமது அறைக்கு உள்ளிட முன்னர் கீழ் அறையிலே இருந்த எனதும், ரவுப் ஹக்கீமினதும் பாதுகாப்பு அதிகாரிகளை தற்காலிகமாக கைது செய்திருந்தனர.

அவர்களின் ஆயுதங்கள், கைபேசிகள் அனைத்தையும் கைப்பற்றி, அவர்களை ஆயுதம் தரித்த ராணுவ வீரர்களின் பாதுகாப்பில் வைத்துவிட்டுதான், மானவடு மேலே வந்திருக்கின்றார் என்பதை நான் பின்னர் அறிந்துகொண்டேன்.

இச்சம்பவங்கள் கீழ் மாடியில் நடந்திருந்தன.

அன்றைய தினம் அவ்விடத்தில் துப்பாக்கி, ஆயுதங்கள் பெருமளவில் இருந்தபோதும், ஒரு வெடிப்பும் நிகழவில்லை.

இருப்பினும் அதற்கு அதிகமான பாரிய சம்பவம் ஒன்று நடந்தது.

அதுதான், நான் மேலே சொன்னது போல, புலிகளுக்கு எதிரான, போரை வென்று தந்த தளபதி பொன்சேகாவை, அதே ஸ்ரீலங்கா ராணுவ வீரர்கள், மிருகத்தை போன்று, “புலி” என குற்றஞ்சாட்டப்பட்ட ஒரு தமிழ் இலங்கையனின் கண் எதிரில், அடித்து இழுத்து சென்றனர்.

அரசியலில் தொடர்ந்து இருந்தால், இந்நூலை ஒருநாள் நான் சிங்களத்தில் மொழிமாற்றம் செய்வேன்.

அப்போது இதை இன்னமும் விபரித்து கூறுவேன்.

-மனோ கணேசன்

Be the first to comment

Leave a Reply