கணவனின் சடலத்தை பார்த்து கதறி அழுத புதுப்பெண்! சம்பவ இடத்துக்கு வந்து துப்பு துலக்கிய மோப்ப நாய்..!

திருமணமான 4 மாதத்தில் புதுமாப்பிள்ளை வெட்டி கொல்லப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த நெமிலி அருகே உள்ள கீழ் வெங்கடாபுரம் கிராமத்தை சேர்ந்த தனஞ்செழியன் மகன் பாரதி என்கிற பாரதிதாசன் (23).

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அடுத்த படாளம் கிராமத்தில் பாரதிதாசன் கோழிப்பண்ணை நடத்தி வந்தார். அங்கம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த சங்கீதா (20) என்பவரை கடந்த 4 மாதங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். தம்பதியினர் படாளம் கிராமத்தில் வசித்து வந்தனர். நேற்று பாரதிதாசன் அவரது மனைவியை அழைத்துக் கொண்டு அவரது சொந்த ஊரான கீழ் வெங்கடாபுரம் கிராமத்திற்கு பைக்கில் வந்தார்.

இரவு 10 மணிக்கு வெளியே சென்று வருவதாக கூறிவிட்டு பைக்கில் சென்றார். அதன்பின் வீடு திரும்பவில்லை.

இன்று காலையில் அதே பகுதியில் உள்ள தனசேகர் என்பவருக்கு சொந்தமான ரைஸ் மில் வளாகத்தில் பாரதிதாசன் வெட்டிக் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். அவரது உடலை பார்த்து மனைவி மற்றும் குடும்பத்தினர் கதறி அழுதனர்.

இது குறித்து பொலிசார் விசாரித்த நிலையில் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு துப்பு துலக்கியது.

பாரதிதாசன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

நேற்று இரவு பாரதிதாசன் அதே பகுதியை சேர்ந்த அவரது நண்பர்கள் சதீஷ் உள்பட 3 பேர் சேர்ந்து மது குடித்துள்ளனர். அப்போது ஏற்பட்ட தகராறில் இந்த கொலை நடந்திருக்கலாம் என பொலிசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.இதையடுத்து பொலிசார் சதீசை விசாரணைக்கு அழைத்து சென்றனர். அவருக்கு மதுபோதை தெளியாததால் தகவல்களை சேகரிப்பதில் தாமதம் ஏற்பட்டது. தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மற்ற 2 பேர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Be the first to comment

Leave a Reply