இலங்கையின் அண்மைய பதவி உயர்வுகள் , பேச்சளவில் கூட நல்லிணக்கம் இல்லை என்கின்றது..ஜஸ்மின் சூக்கா..!

இலங்கையில் போர் முடிவடைந்து 11 ஆண்டு நிறைவில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு வேண்டுமென்றே மேஜர் ஜெனரல் பதவியுயர்வு வழங்கியுள்ளார். பாதுகாப்புத்துறைச் சீர்திருத்தத்துக்கான ஐ.நாவின் தீர்மானம் 30/1 இன் கீழ் இலங்கையின் உறுதிப்பாடுகளுக்கு இணங்க உத்தியோகபூர்வமான பதவிகள் வழங்கப்பட முன்னர் இந்த அதிகாரிகள் வழிகாட்டல் மற்றும் ஆய்வுக்குட்படுத்தப்பட்டிருக்க வேண்டும்.

‘இந்த தனிநபர்களின் தெரிவானது அரசியலை அடிப்படையாக கொண்டதொன்று இது இலங்கையர்களுக்கும் சர்வதேச சமூகத்துக்கும் பேச்சளவிலான நல்லிணக்கம் என்பது கூட நிகழ்ச்சி நிரலில் இல்லை என்ற செய்தியை மீண்டும் அனுப்புகின்றது. இது பாதிக்கப்பட்டவர்களை இழிவுபடுத்தும் இன்னுமொரு செயலாகவும் தண்டனையிலிருந்து துணிவாக பாதுகாப்பு வழங்கும் செயலாகவும் உள்ளது’ என்று சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் ஜஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார்.

இலங்கையின் ஒரு இராஜதந்திரியாக இருந்தவேளையில் பொதுக் கட்டளைச் சட்டத்தை மீறியதாக நீதிமன்றத்துக்கு சமூகமளிக்காதபோதும் பிரிட்டன் நீதிமன்றத்தால் குற்றவாளியாக இனங்காணப்பட்ட பிரியங்க பெர்னாண்டோவின் பதவியுயர்வானது மிகவும் முக்கியமானதாகும்.

2018 ஆம் ஆண்டு பிரிட்டனிலுள்ள இலங்கைத் தூதரகத்துக்கு வெளியே தமிழ் ஆர்ப்பாட்டக்காரர்கள்மீது கழுத்தை அறுக்கும் சைகையைக் காட்டி அச்சுறுத்தல் மேற்கொண்டதாக குற்றஞ்சாட்டப்பட்டார். இவர் குற்றச்செயல்கள் புரிந்தபோதும் இலங்கைக்கு திரும்பிச் சென்றதில் இருந்து இவருக்கு மீண்டும் மீண்டும் பதவியுயர்வுகள் வழங்கப்பட்டதுடன் ஒரு மாவீரனாகவும் அழைக்கப்பட்டார்.

‘நீங்கள் உலகம் முழுவதும் சென்று நாடுகடந்து வாழும் தமிழர்களை இழிவுபடுத்தி அச்சுறுத்தினால் உங்களுக்கு பரிசு வழங்கப்படும் என்பதே இராணுவ அதிகாரிகள் மற்றும் இராஜதந்திரிகளுக்கான செய்தியாகும்’ என்று சூக்கா தெரிவித்தார். இது பிரிட்டனின் நீதிமுறைமையை அவமதிக்கும் ஒரு மோசமான நடவடிக்கையுமாகும்’.

விசேட அதிரடிப்படைகளின் முன்னாள் தளபதியான கரேந்திர பராக்கிரம ரணசிங்கவின் பதவியுயர்வானது பொறுப்புக்கூறலுக்கு விழுந்த இன்னுமொரு பெரிய அடியாகும். மே 2009இல் இசைப்பிரியா என்று அறியப்பட்ட தமிழ்த் தொலைக்காட்சியின் பெண் தயாரிப்பாளர் இராணுவத்தினரிடம் சரணடைவது பற்றிய வீடியோக்களில் ஒன்றில் இவர் அடையாளங்காணப்பட்டுள்ளார். இந்தப் பெண் தயாரிப்பாளர் சிறிது நேரத்தின் பின்னர் இராணுவத்தின் பிடியில் இருந்த வேளையில் கொலைசெய்யப்பட்டதாக ஐ.நா. விசாரணை ஒன்று கண்டுபிடித்தது. இசைப்பிரியாவுடன் தெளிவாக வீடியோவில் காணப்பட்டபோதும் என்ன நடந்தது என்பது பற்றி ரணசிங்க இன்று வரை விசாரிக்கப்படவில்லை. இசைப்பிரியாவின் அரைநிர்வாண உடல் வெற்றிப் புகைப்படங்களில் காணப்பட்டது. ‘தமது மகளுடைய கொலைக்கான முக்கிய சாட்சி ஒருவர் மேஜர் ஜெனரலாக பதவியுயர்வு வழங்கப்படுவதைப் பார்க்கும் போது நாடுகடந்து வாழ நிர்பந்திக்கப்பட்டுள்ள இசைப்பிரியாவின் உயிர் தப்பியுள்ள குடும்பத்தினருக்கு எப்படி இருக்கும் என்று யாராவது கேட்க வேண்டும்’ என சூக்கா தெரிவித்தார். 

சன்னா டி வீரசூரியா யாழ்ப்பாணத்தில் 512 ஆவது படையணியின் தளபதியாக இருந்தார். அந்தக் காலப்பகுதியில் அந்தப் படையணியும் வேறு படையணிகளும் தமிழ் சந்தேக நபர்களை தடுத்து வைத்துச் சித்திரவதை செய்ததில் தொடர்புபட்டிருந்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டது. இந்த தமிழ்ச் சந்தேக நபர்களில் சிலர் சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டத்தால் பேட்டி காணப்பட்டார்கள்.

அதிகரித்த இராணுவ மயமாக்கல் மற்றும் ஜனாதிபதிக்கு நெருக்கமான ஓய்வுபெற்ற மற்றும் சேவையாற்றும் அதிகாரிகளுக்கு சிவில் பதவிகள் வழங்கப்பட்டு வரும் பின்னணியில் இந்த பதவிவுயர்கள் இடம்பெற்றுள்ளன.

கொவிட் 19 இனால் பாதுகாப்பு பற்றிய கரிசனைகள் இருந்த போதும் ஆயுதப்படையினரை உள்ளடக்கி இந்த வாரம் கொழும்பில் ஒரு போர் ஞாபகார்த்த நிகழ்வை நடாத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் இவ்வாறான ஞாபகார்த்த நிகழ்வு வடக்கு – கிழக்கில் இடம்பெறுவதைத் தடுப்பதற்கு பாதுகாப்பு படையினரால் வைரஸ் ஒரு சாட்டாகப் பயன்படுத்தப்பட்டது.

பொதுச் சமூகமட்டத்தில் இராணுவச் செல்வாக்கு சாதாரணமாக்கப்படுவதையே நாங்கள் பார்த்துக் கொண்டிருக்கின்றோம் என்று குறிப்பிட்ட சூக்கா தண்டணையிலிருந்து பாதுகாப்பு மேலும் வலுப்பெறும் வகையில் முறைப்படியற்ற வலையமைப்புக்கள் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் கீழ் உத்தியோகபூர்வமானவையாக மாற்றப்பட்டுவருகின்றன எனவும் தெரிவித்தார்.

Be the first to comment

Leave a Reply