இறக்குமதி குறித்து இலங்கை அரசு புதிய தீர்மானம்..!

அரசாங்கத்தின் பொருளாதார மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் விதிக்கப்பட்ட இறக்குமதி கட்டுப்பாடுகளைத் தளர்த்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அதற்கமைய, சீமெந்து, இரும்பு உள்ளிட்ட கட்டட நிர்மாணத்திற்கு தேவையான மூலப்பொருட்களை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இறக்குமதி கட்டுப்பாடுகளைத் தளர்த்துவதற்கான உத்தரவை ஜனாதிபதி செயலாளர் கலாநிதி P.B. ஜயசுந்தர, இலங்கை சுங்கத்திற்கு நேற்று (21) அனுப்பியுள்ளார்.

துறைமுக நகரம் உள்ளிட்ட நாட்டில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி திட்டங்களுக்குத் தேவையான சீமெந்து மற்றும் இரும்பு உள்ளிட்ட மூலப்பொருட்களை தட்டுப்பாடின்றி விநியோகிப்பதற்கான தேவைக்கு அமைய, இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக, ஜனாதிபதி செயலாளரினால் விடுக்கப்பட்டுள்ள உத்தரவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

முழுமையான அனுமதியின் கீழ், இறக்குமதி செய்யப்படும் சீமெந்து, இரும்பு, பிளாஸ்டிக் ஆகியவற்றுக்கான உற்பத்தி மூலப்பொருட்கள் உள்ளிட்ட பல பொருட்களை உரிய வரியின் கீழ் இறக்குமதி செய்ய அனுமதி கிட்டியுள்ளது.

இதேவேளை, விசேட வர்த்தக வரியின் கீழ், உணவுப்பொருட்கள் மற்றும் பழங்கள் உள்ளிட்ட உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படாத விவசாயப் பொருட்களுக்கு, இந்த நடவடிக்கையின் கீழ் இறக்குமதிக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கட்டுப்பாடுகளின் கீழ் பாம் ஒயில் இறக்குமதிக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், வாகனங்கள் இறக்குமதிக்காக விதிக்கப்பட்டுள்ள வரையறைகளை தளர்த்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை

Be the first to comment

Leave a Reply