இந்தநாட்டையே உலுக்கியிருக்கிறது இந்தபடம்

ஒட்டு மொத்த இந்தியாவையும் கண்ணீர் விடவைத்திருக்கிறது..

இந்தப் படம் புலம் பெயர்ந்த ஒரு ஏழை இந்தியனின் கதையை உள்ளடக்கியது..
இந்தப் படம் சொல்லும் நிஜக்கதையை நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்.

வெறிச்சோடிய டில்லி வீதியில் தனது வாகனத்தை மெதுவாக ஒட்டிக்கொண்டிருந்தார் பிடிஐ போட்டோகிராபர் அதுல்யாதவ்.

கடந்த சில நாளாக டில்லியில் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் படும்பாட்டை படம் எடுத்து படம் எடுத்து அவர் மனது நொந்து போயிருந்தது.

இந்த சூழ்நிலையில் டில்லி நிஜாமூதின் பாலத்தினை கடந்து செல்லும் போது பாலத்தின் ஒரத்தில் அவர் கண்ட காட்சி ஒட்டிச் சென்ற வாகனத்தையும் பல வித சிந்தனைகளுடன் ஒடிக்கொண்டிருந்த மனசையும் திடீர் பிரேக் போட்டு நிறுத்தியது.

ஆண் அவ்வளவு சீக்கிரம் அழுதுவிடமாட்டான், எவ்வளவு சிரமம் வந்தாலும் கலங்கவும்மாட்டான் என்ற உண்மையை உடைக்கும் வகையில் ஒரு ஆண் கையில் உள்ள போனில் அழுது கொண்டே பேசிக்கொண்டு இருந்தார்.

முகமெல்லாம் கலங்கிப்போயிருந்தது,
அழுது அழுது கண்களும் வீங்கிப் போயிருந்தது. ஒட்டு மொத்த சோகத்தையும் முகத்தில் தேக்கிவைத்திருந்த அந்த நபரின் பரிதாபநிலையை படம் எடுத்தார் போட்டோகிராபர்.

இவர் படம் எடுப்பது எதைப்பற்றியும் கண்டுகொள்ளாமல் அவர் பேசிக்கொண்டே அழுது கொண்டு இருந்தார்.

தொடர்ந்து படம் எடுக்க மனம் வரவில்லை.
அவரை நெருங்கி தான் வைத்திருந்த பிஸ்கட் மற்றும் தண்ணீரை கொடுத்து ஆசுவாசப்படுத்தினார்.

பிறகு ஏன் இந்த அழுகை என்று விசாரித்தார். அவர் தன் கதையை விவரித்தார் பீகார் மாநிலம் பெகுசாராய் என்ற ஊரைச் சேர்ந்தவர், பெயர் ராம்புகர் பண்டிட். மனைவி நான்கு குழந்தைகள். மூன்று பெண் ஒரு ஆண்.

உள்ளூரில் பிழைக்க வழியில்லாமல் 1200 கிலோமீட்டர் துாரம் தாண்டி வந்து டில்லியில் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.

காசு செலவாகும் என்பதால் வருடத்திற்கு ஒரு முறையோ இருமுறையோ வீட்டிற்கு போவது உண்டு.

கொரோனா பலரது வாழ்க்கையை புரட்டிப் போட்டது போல இவரது வாழ்க்கையிலும் விளயைாடியது. வேலை இழந்தார், கையில் காசில்லை ஊருக்கு போக வழியும் தெரியவில்லை திண்டாடிக் கொண்டு இருந்தார்.

இந்த சூழ்நிலையில் ஊரில் உள்ள இவரது ஒரே மகனான ஒரு வயது ராம்பிரகாஷ்க்கு உடம்புக்கு முடியாமல் போனது.

தகவல் கேள்விப்பட்டதும் மகனின் மீது உயிரையே வைத்திருந்த பண்டிட், போட்டு இருந்த அழுக்கு உடையுடன் ஊரை நோக்கி நடக்க ஆரம்பித்துவிட்டார்.

நீண்ட துாரம் நடந்து நிஜாமூதீன் பாலம் அருகே வந்த போது நடந்து செல்பவர்களை மடக்கி போலீஸ் திருப்பி அனுப்பிக் கொண்டு இருந்தது.

இவரையும் திரும்பி போகும்படி சொன்னது.’ஐயா பையன் சாகக்கிடக்கிறான், கடைசியாக ஒரு முறை பார்க்க அனுமதியுங்கள்’ என்று கெஞ்சியிருக்கிறார்,

கொரோனா சட்டப்படி உயிருடன் இருப்பவர்களை பார்க்க அனுமதி இல்லை, இறந்தால் மட்டுமே அனுமதி அதுவும் போதுமான சான்றிதழ் வேண்டும் அதன்பிறகுதான் இந்த எல்லையை தாண்டமுடியும் என்று போலீஸ் கறராக சொல்லிவிட்டது.

மேலே செல்லவும் முடியாமல், திரும்பப் போகவும் மனமில்லாமல் அந்த பாலத்தின் கிழேயே மூன்று நாட்கள் உட்கார்ந்து இருக்கிறார்.

வீட்டில் இருந்து மகனின் நிலமையை மோசமாகிக் கொண்டே போகிறது என்று தகவல் வரும் போதெல்லாம் அவரால் கண்ணீர் விட்டு கதறவும் வாய்விட்டு அழவும்தான் முடிந்தது.

இந்த சூழ்நிலையில்தான் போட்டோகிராபர் கண்ணில் பண்டிட் பட்டார்.

கிடைத்த தகவல் படத்துடன் அலுவலகம் வந்த போட்டோகிராபர் பண்டிட் பற்றிய படத்தையும் தகவலையும் பத்திரிகைகளுக்கு அனுப்பிவிட்டு வீட்டிற்கு சென்றார்.

இரவு முழுவதும் துாக்கம் இல்லை பண்டிட்டை நினைத்து புரண்டு புரண்டு படுத்தவர் விடிந்ததும் கொஞ்சம் பணமும் சாப்பாடும் எடுத்துக் கொண்டு பாலத்தருகே சென்றார்.

அங்கு பண்டிட் இல்லை? என்ன நடந்தது? படம் எடுக்கும் போது பண்டிட்டின் மகன் சீரியசாக இருந்து இருக்கிறான் அதனால்தான் குமுறிக் குமுறி அழுதிருக்கிறார்.

அன்று இரவே பண்டிட்டின் மகன் இறந்துவிட்டான். தகவல் வந்ததும் பித்துப்பிடித்தது போலான பண்டிட் அங்கு இருந்த போலீசிடம் ‘என் பையன் செத்துட்டான்யா உங்க சட்டப்படி செத்துப் போன பையனை பார்க்க இப்பவாவது விடுங்கய்யா’ என்று கதறியிருக்கிறார்.

அப்போதும் கல் நெஞ்சம் கொண்ட ஒரு போலீஸ்காரர் ‘உன் பையன்தான் செத்துப் போயிட்டானே நீ போய் என்ன பிழைக்க வைக்கப் போறீயா? மேலும் இங்கு இருந்து நீ நிற்காமல் ஒடினாலும் ஊர் போய்ச் சேர மூன்று நாளாகுமே’ என்று சொல்லி நோகடித்திருக்கிறார்.

பக்கத்தில் இருந்த மற்றொரு போலீஸ்காரர்’ நீ டில்லி ரயில் நிலையத்திற்கு போ அங்கு இருந்து சிறப்பு ரயில் போகிறது’ என்று வழிகாட்டியிருக்கிறார்.

அழுது கொண்டே ரயில் நிலையம் வருவதற்குள் விடிந்துவிட்டது..

அதுல் பைல் செய்த படமும் செய்தியும் இரவோடு இரவாக இணையத்திலும் பத்திரிகைகளிலும் பரவியிருந்தது.

இதைப் படித்த மனித நேயம் கொண்ட ஒரு பெண்ணின் பார்வையில் ரயில் நிலையத்தில் பரிதாபமாக நின்று கொண்டிருந்த பண்டிட் தென்பட்டார்.

அவரை அன்புடன் அணுகி கையில் இருந்த ஐயாயிரத்து ஐநுாறு ரூபாயை செலவிற்கு கொடுத்தார், பின் பிகார் புறப்பட்ட சிறப்பு ரயிலில் டிக்கெட்டும், சாப்பாடும் வாங்கிக் கொடுத்து அனுப்பிவைத்தார்.

இதற்கு பின்னும் பண்டிட்டிட்டை சோகம் விடுவதாகயில்லை.

இரண்டு மணி நேரத்தில் பிணத்தை எடுக்க வேண்டும் என்று கொடுத்த நெருக்கடியில் அப்பா வருவதற்குள் மகனின் பிணம் அடக்கம் செய்யப்பட்டது.

இப்படி எல்லாம் ஆகிவிட்டதே என்று பண்டிட்டின் மனைவி நோய்வாயப்பட்டார்.

எல்லோரையும் கட்டிணைத்து ஆறுதல் சொல்லி தேறுதல் சொல்லும் எண்ணத்துடன் ரயில் நிலையம் வந்திறங்கியவரை தனிமைப்படுத்துவதற்காக சுகாதார துறையினர் ரயில் நிலையத்திற்கு வந்துவிட்டனர்.

பேசமுடியாத துாரத்தில் குடும்பத்தினர் நிற்க பத்து நிமிடம் பண்டிட்டும் அவரது குடும்பமும் பார்த்துக் கொண்டனர். இரு தரப்பிலும் மீண்டும் கண்ணீர் பெருக்கெடுத்தது.

உடலால் அவர்களும் மனதால் பண்டிட்டும் பாதிக்கப்பட்டு பலவீனப்பட்ட நிலையில் பிரிந்தனர். இப்போது மனைவியும் மகள்களும் தந்தையைக் காணமுடியாத சோகத்தில் வீட்டில்,…

நெஞ்சு வெடித்துவிடும் வேதனையுடன்.

Be the first to comment

Leave a Reply