எமக்கு அழுத்தம் தந்தால் சர்வதேச உறுப்புரிமையிலிருந்து விலகுவோம்..-ஜனாதிபதி

சர்வதேச அமைப்புகள், அநாவசியமாக இலங்கைக்கு அழுத்தம் கொடுத்தால், அந்த அமைப்புக்களின் உறுப்புரிமையை நீக்கிக்கொள்வோம் என, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

யுத்த வெற்றியின் 11 ஆவது நினைவு தினம், இன்று மாலை இடம்பெற்ற வேளை இக்கருத்தை வெளியிட்டார்.

மே 19 இலங்கை வரலாற்றில் உரிமையை மீட்டெடுத்த விசேடமான நாள்.

இன்றைக்கு 11 ஆண்டுகளுக்கு முன்னர் முப்பது வருடங்களாக நாட்டில் காணப்பட்ட மிலேச்சத்தனமான பயங்கரவாத அமைப்பினை அழித்தொழித்த நாள்.

அதற்கு தலைமைதாங்கியவர் ஜனாதிபதியாக இருந்த மகிந்த ராஜபக்ச அவர்கள்.
பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டதன் பின்னர், சந்தேகம், பயம் இல்லாது வாழும் சூழலும், நாம் உரிமையோடு வாழ்வதற்குரிய நிலைமையும் ஏற்பட்டது.

முப்பது வருடங்களின் பின்னர், ஜனநாயக ரீதியில் தேர்தலை நடாத்தக் கூடிய காலம் கிடைத்தது.

இந்த நாட்டில் வாழும் அனைவரும், மொழிகளுக்கு அப்பால் நாட்டின் எந்தப் பாகங்களுக்கும் சுதந்திரமாக சென்று வருவதற்குரிய நிலைமை ஏற்படுத்தப்பட்டது.

அச்சமான நிலையிலிருந்து எமது நாட்டை மீட்டெடுப்பதற்காக, பாதுகாப்பு படையினரும் அவர்களது குடும்பங்களும் பாரிய பங்குபற்றுதலை வழங்கியிருக்கின்றார்கள்.

யுத்தக்களம் என்பது ரோஸாப் பூக்களிலான மெத்தை அல்ல.

யுத்தம் நிலவிய அந்தக் காப்பகுதியிலே அப்பகுதி அல்லாது ஏனைய பகுதிகளில் சிவில் மக்கள் பலியானார்கள்.

தற்கொலைப் படையினர், பஸ்ஸிலே, ரயிலிலே குண்டுகள் வெடித்தன.

முக்கியத்துவம் வாய்ந்த நிலையங்களில் எல்லாம் குண்டுகள் வெடித்து, இந்த நாட்டில் மரணங்கள் மட்டுமல்ல அனைத்தும் வீழ்ச்சி கண்டது.
மனித நேயமற்ற இந்த செயல்களினால், நாட்டில் நிலையான சமாதானம் ஒன்றை ஏற்படுத்த வேண்டியிருந்தது.

படையினரின் பாரிய முயற்ச்சியினால், இன்று ஒருமித்த நாட்டிற்குள் சாந்தியும் சமாதானத்துடனும் வாழ்வதற்குரிய நிலைமை ஏற்பட்டிருக்கின்றது.

நாட்டிற்காக இராணுவத்தில் பணியாற்றியவன் என்ற வகையிலும், 10 வருடங்கள் பாதுகாப்பு செயலாளராக பதவி வகித்தவன் என்ற ரீதியிலும், எமது படையினரின் அர்ப்பணிப்புக்கள் தொடர்பில் கூடிய புரிதல் இருக்கின்றது.

யுத்தக்களத்தை நன்றாக அறிந்து கொள்ள முடிகின்றது.

ஆகவே நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்துவதற்காக அர்பணிப்புச் செய்த படையின் கௌரவத்தை இல்லாமல் செய்வதற்கு எடுக்கும் முயற்சிகளுக்கு ஒருபோதும் நான் இடமளிக்கப் போவதில்லை.

எனது அரசாங்கத்தில் இந்த நாட்டின் படை வீரர்களின் கௌரவத்தை எந்நாளும் பாதுகாப்பேன் என்பதை உங்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றேன்.

அவர்களின் உரிமையை பாதுகாப்பது தேசிய பொறுப்பு.

அநாவசியமற்ற வகையில் அவர்களை அச்சத்திற்கு உள்ளாக்குவதற்கு சந்தர்ப்பம் வழங்கப் போவதில்லை.

அதுபோன்று நாட்டிற்கு தீங்கை ஏற்படுத்தும் வகையில் அனாவசியமற்ற தலையீடுகளை அழுத்தங்களை வழங்கும் நிறுவனங்களிலோ அல்லது அமைப்புக்களிலிருந்து இலங்கையின் உறுப்புரிமையை நீக்கிக் கொள்வதற்கு ஒருபோதும் நான் பின்னிற்கப்போவதில்லை. என குறிப்பிட்டுள்ளார்.

யுத்த வெற்றியின் 11 ஆவது நினைவு தினம், இன்று மாலை, ஜனாதிபதி தலைமையில் நடைபெற்றது.

யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு 11 ஆண்டுகள் பூர்த்தியாகும் நிலையில், 11 ஆவது போர் வெற்றி தினம், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில், இன்று மாலை நடைபெற்றது.

நாடாளுமன்றத்திற்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள, தேசிய இராணுவ வீரர்கள் நினைவுத்தூபி வளாகத்தில், நிகழ்வு இடம்பெற்றது.

இந்த நிகழ்வில், பிரதமர் மகிந்த ராஜபக்ஷ, இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா, பாதுகாப்பு செயலாளர் கமல் குணரட்ன மற்றும் அமைச்சர்கள், பாதுகாப்பு அதிகாரிகள் என பலர் பங்கேற்றனர்.

வழமையாக, இராணுவ அணிவகுப்புகள், போர் நினைவு நிகழ்வுகள் என விமர்சையாக கொண்டாடப்பட்டாலும் கூட, கொவிட்-19 வைரஸ் தொற்றுநோய் பரவல் காரணமாக, சமூக ஒன்றுகூடல் குறித்த அச்சுறுத்தல் காணப்படும் நிலையில், ஆடம்பரமில்லாது அமைதியான முறையில் போர் வெற்றி தினம் நடத்தப்பட்டதாக, அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.

இன்றைய போர் வெற்றி தினத்தில், இராணுவத்தின் 14 ஆயிரத்து 617 பேருக்கு பதவி உயர்வுகளும் வழங்கப்பட்டுள்ளது.

இலங்கையில், இராணுவ வரலாற்றில் இடம்பெற்றுள்ள பதவி உயர்வு நிகழ்வுகளில், ஒரு நாளில் அதிக இராணுவ வீரர்களுக்கு பதவி உயர்வு வழங்கிய நிகழ்வு இதுவாகும்.

நாட்டின் பாதுகாப்பிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும், இராணுவ வீரர்களுக்கு வழங்கும் கௌரவமாக, இந்த பதவி உயர்வு வழங்கப்படுவதாக, பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

நிகழ்வின் இறுதியில், ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட அனைவரும், நினைவுத்தூபிக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

Be the first to comment

Leave a Reply