அரசாங்கத்திற்கு தேர்தல்கள் ஆணைக்குழுவின் உடனடி உத்தரவு..!

அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் முன்னாள் ராஜாங்க அமைச்சர்கள் தங்களது அதிகாரபூர்வ வாகனங்களை தேர்தல் நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தக் கூடாது என தேர்தல் ஆணைக்குழு, அரசாங்கத்திற்கு எழுத்து மூல உத்தரவு பிறப்பித்துள்ளது.

தேர்தல் ஆணைக்குழவின் இந்த உத்தரவு குறித்து அண்மையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் அதிகாரபூர்வ வாகனங்களை ஒரு மாதத்திற்கு ஒரு லட்சம் ரூபா என்ற வாடகை அடிப்படையில் பயன்படுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியிருந்ததாக பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

வாகனங்கள் மட்டுமன்றி அதிகாரபூர்வ இல்லங்களையும் ஒரு மாதத்திற்கு ஒரு லட்சம் ரூபா என்ற அடிப்படையில் வாடகைக்கு வழங்க அமைச்சரவை பத்திரம் மூலம் அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

எனினும் இந்த நடவடிக்கைகள் தேர்தல் சட்டத்திற்கு முரணானது என தேர்தல் ஆணைக்குழு பிரதமருக்கு அறிவித்துள்ளது.

இந்த நிலையில் கடந்த 2015ம் ஆண்டில் ஆட்சியில் இருந்த அரசாங்கம் இவ்வாறான ஓர் அமைச்சரவை பத்திரம் மூலம் வாகனங்களை பயன்படுத்தியமையை முன்னுதாரணமாகக் கொண்டே தமது அரசாங்கம் இந்த அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பித்ததாக பிரதமர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் 2015ம் ஆண்டு சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு தேர்தல் அதிகாரிகள் எதிர்க்கவில்லை எனவும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் இது தொடர்பில் கடந்த கால மற்றும் தற்போதைய அமைச்சரவை பத்திரங்கள் உள்ளிட்ட விடயங்களை உள்ளடக்கி விரிவான விளக்க கடிதமொன்றை தேர்தல் ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைக்குமாறு அமைச்சரவை, அமைச்சரவை செயலாளருக்கு பணிப்புரை விடுத்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

Be the first to comment

Leave a Reply