வாக்குமூலம் ஒன்று முள்ளிவாய்கால்..!

நான் வட்டுவாகல், முல்லைத்தீவைச் சேர்ந்தவன். போருக்கு முன்னர் கடற்றொழில் செய்து வந்தேன். எவ்வளவு வேலை இருந்தாலும் தனியாக எனது வேலைகளைச் செய்து கொள்வேன். இறுதிப்போரின் போது கிபிர் தாக்குதலில் எனது இரண்டு கால்களையும் இழந்து விட்டேன். பலதடவைகள் இறந்து விடுவோமோ என்று யோசித்திருக்கிறேன். வைத்தியசாலையில் இருக்கும் போது கூட, அவர்களிடம் பல தடவைகள் என்னை ஊசி போட்டு கொன்று விடுங்கள் என்று கேட்டிருக்கிறேன். ஆனால் அவர்கள் என்னை சுகப்படுத்தி அனுப்பிவிட்டார்கள்.

குணமாகி வீடு வந்ததும் மூன்று சக்கர நாற்காலியில் நாட்களைக் கழித்தபோது என்னிடம் பேசினால் எங்கே எனக்கு உதவி செய்ய வேண்டி வந்துவிடுமோ என்ற எண்ணத்திலேயே என்னிடம் யாரும் பேசத் தயங்கினார்கள். நிறுவங்கள் கூட எனக்கு இரண்டு கால்களையும் இழந்தவன் என்ற வகையில் எந்த முன்னுரிமையுமளிக்கவில்லை. பலர் வந்து என்னிடம் நேர்காணல் எடுப்பார்கள், உதவி தருவதாக உறுதியளிப்பார்கள், ஆனால் இதுவரை யாரும் எந்த உதவியும் வழங்கவில்லை. ஒருகட்டத்தில் யாரையும் நம்பி இருக்கமுடியாது என்ற நிலையில் நான் கடற்தொழிலுக்கு செல்லத் தொடங்கினேன். எனக்கு முடியாது என்ற மனநிலையை மாற்றிக்கொள்ள மிகவும் பிரயத்தனப்பட்டேன்.

இப்போது என்னால் கால்கள் இருந்தபோது செய்த வேலைகளை விட அதிக வேலைகளை செய்ய முடிகிறது. நான் யாரிலும் தங்கி வாழக்கூடாது என்ற ஓர்மம், எனது குடும்பத்தினர் யாரிடமும் கையேந்திவிடக்கூடாது என்ற மனோபாவம் என்னைப் பல வேலைகளைச் செய்ய வைக்கிறது. ஆனாலும் மற்றவர்கள் இன்னும் என்னை ஒரு இயலாதவனாகவே பார்ப்பதைத் தவிர்க்க முடியவில்லை

ஒரு நிலையான தொழிலைத் தக்கவைத்துக் கொள்ள பல இடங்களில் உதவிகள் கேட்டும் எனக்குப் பெரிய அளவில் எந்த உதவியும் கிடைக்கவில்லை. எனது சொந்த முயற்சியாலும் உழைப்பினாலும் ஒரு தளம்பலற்ற நிலைக்கு வந்த பின்னர் தான் சமூகம் என்னையும் ஒரு மனிதனாக இப்போது அங்கீகரித்திருக்கிறது. முதலில் சமூகம் என்னைத் தள்ளி வைத்திருந்தாலும் இப்போது என்னை ஏற்றுக் கொண்டது எனக்கு மிகவும் மகிழ்ச்சியே. தனித்திருக்கும் மனநிலை பயங்கரமானது. காலம் பிந்திய கரிசனையாயிருந்தாலும் இப்போது எனக்குக் கிடைக்கும் சமூக ஊடாட்டமானது மனத் தைரியத்தைத் தருகிறது.

கால்கள் இருக்கும் போது என்னால் செய்த வேலைகளை இப்போது செய்ய முடியாது. கடலுக்குப் போகும் போது யாரோ ஒருவரின் உதவி எனக்குத் தேவைப்படும். நான் மாற்றுத்திறனாளி என்பதால் சிலர் எனக்கு மனமுவந்து உதவி செய்வார்கள், சிலர் உதவி செய்ய வேண்டி வந்துவிடுமோ என்பதாலேயே என்னைத் தவிர்த்துக்கொள்ளுவார்கள்.

சில அரச அலுவகங்களிலும் சில வங்கிகளிலும் மட்டுமே மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகள் செய்யப்பட்டிருக்கின்றன. சேவைகள் பெற்றுக் கொள்ளும் ஏனைய இடங்களில் நாங்கள் இருப்பதோ, அல்லது முன்னுரிமை பெற்றுக் கொள்வதோ அல்லது கழிப்பறையை உபயோகப்படுத்துவதோ மிகவும் கஷ்டமானது. சிலர் மாற்றுத்திறனாளிகள் முன்னுரிமை கொடுத்துக் கவனிக்கப்படுவதாகவும் அவர்களது தேவைகள் பூர்த்தி செய்யப் படுவதாகவும் சொல்வார்கள்,

Be the first to comment

Leave a Reply