ஞான சார தேரருக்கு எதிராக முல்லைத்தீவில் வழக்குத்தாக்கல்..

முல்லைதீவு பழைய செம்மலை நாயாறு பிள்ளையார் ஆலயத்தை அபகரித்து தங்கியிருந்த குருக்கந்த ரஜமஹா விகாரை விகாராதிபதியின் உடலை நீதிமன்ற உத்தரவை மீறி தகனம் செய்த விவகாரம் தொடர்பில் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் உள்ளிட்ட மூவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இது குறித்த வழக்கு நேற்று முன்தினம் மேன்முறையீட்டு நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.எச்.எம்,டி நவாஸ் மற்றும் ஆர் .எம் சோபித்த ராஜகருணா ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை கண்டித்து மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா தாக்கல் செய்துள்ள நிலையில் மனுதாரர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் பிரசன்னமாகி இருந்தார். பொதுச் செயலாளர் ஞானசார தேரர் மன்றில் ஆஜரானதுடன் அவர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குணரத்ன மன்றில் ஆஜரானார்.

எனினும் இந்த அவமதிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஏனைய இரு பிரதிவாதிகளான முல்லைத்தீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் பிரதேசத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோர் மன்றில் ஆஜராகவில்லை. அவர்கள் இருவரும் விசேட கடமையில் ஈடுபட்டுள்ளதால் நீதிமன்றில் ஆஜராக முடியவில்லை என நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் வழக்கை செப்டம்பர் 16ஆம் தேதி வரை ஒத்திவைக்க நீதிபதிகள் தீர்மானித்தனர்.

Be the first to comment

Leave a Reply