கடலில் சிந்திய கதறிய இரத்தங்கள்.. குமுதினி நினைவு நாள் இன்று

1985ஆம் ஆண்டு மே மாதம் 15 ஆம் நாள் காலை ஏழு மணிக்கு நெடுந்தீவு மாவிலி துறைமுகத்திலிருந்து தமது பயண சேவகியாக இருந்த குமுதினிப் படகில் பயணத்தை ஆரம்பித்த 64 பேருக்கும், தமது இறுதி பயணம் அதுவென தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

ஏறக்குறைய அரை மணிநேரம் பயணித்த குமுதினி படகு இரண்டு சிறிய பிளாஸ்ரிக் படகில் வந்த இலங்கை கடற்படையினரால் வழிமறிக்கப்பட்டது.

குமுதினி படகினை உடனடியாக தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த கடற்படையினர், படகின் ஒரு பகுதிக்கு பயணிகளை அழைத்து பின்ன ஒவ்வொருவராக படகின் கீழ்ப்பகுதிக்கு அழைத்து கொடூரமான முறையில் அவர்களை கொலை செய்ய ஆரம்பித்தனர்.

இவ்விடயம் அறிந்து ஓரிருவர் கடலில் குதித்த போதும் அவர்களும் துப்பாக்கிகளுக்கு இரையாக்கப்பட்டிருந்தனர்.

அனைத்தும் முடிந்தபின்னர் ஓசைகள் ஏதுமற்று மிதந்துகொண்டிருந்த குமுதினிப் படகில் ஓலமும், எந்த பாவமும் அறியாத பயணிகளின் இறுதி ஓசைகளும் மட்டும் சன்னமாய் ஒலித்துக்கொண்டிருந்தன. கூடவே குருதியும் வழிந்தோடியது.

இக்குரூர சம்பவத்தால் பாதிக்கப்பட்ட அனைவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னரும் கூட பல நெருக்கடிகளுக்கு பின்னரே காயமடைந்தவர்களின் உயிர்கள் காக்கப்பட்டன.

இந்த படுகொலை தொடர்பாக, இலங்கை பொலிஸாரிடம் முறையிடப்பட்டது. மனித உரிமை ஆணையகத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. நீதி தேடிய பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன.

எது எப்படி இருந்தாலும் ஈழத் தமிழர்கள் மீது மேற்கொள்ளப்பட்டு நீதி மறுக்கப்பட்ட பல்வேறு அத்துமீறல்களில் ஒன்றாக குமுதினிப் படுகொலையும் ஆகிப்போனதே தவிர, நீதியும், கொல்லப்பட்டவர்களின் கடைசி விசும்பல்களுக்கான பதிலும் இதுவரை கிடைக்கவே இல்லை.

Be the first to comment

Leave a Reply