ஒரு சதம் கூட இன்னும் வெளிநாடுகளிலிருந்து வரவில்லை- அரசாங்கம்

வெளிநாடுகளும் சர்வதேச நிதி நிறுவனங்களும் அறிவித்த இலங்கைக்கான கொரோனா வைரஸ் ஒழிப்புக்கான நிதி உதவிகள் இதுவரை வந்துசேரவில்லை” என்று இலங்கை அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

அமைச்சர்கள் மற்றும் அரச உயரதிகாரிகளுக்காக மூவாயிரம் வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன என வெளியாகிய குற்றச்சாட்டுக்களையும் அரசாங்கம் நிராகரித்துள்ளது.

கொவிட்-19 வைரஸைக் கட்டுப்படுத்துவதற்காகவும் ஒழிப்பு பணிகளுக்காகவும் அமெரிக்கத் தூதரகம், உலக வங்கி உள்ளிட்ட பல்வேறு வெளிநாட்டு அரசாங்கங்கள் மற்றும் நிதி நிறுவனங்கள் இலங்கைக்கு வழங்கிய நிதி உதவிகளை அரசாங்கம் மறைத்துவிட்டது என ஐக்கிய தேசியக் கட்சி உட்பட எதிரணியினர் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

மக்களுக்கான பணம் மக்களுக்குப் போய்ச் சேராமல் அவை அரசியல்வாதிகள் மற்றும் மோசடியாளர்களிடம் சிக்கிவிட்டது எனவும், கொரோனா வைரஸ் ஒழிப்புப் பணிகள் இதனால் ஸ்தம்பிதமடைந்துள்ளன எனவும் எதிரணி உறுப்பினர்கள் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று (14) நடைபெற்றது.

இதன்போது, எதிரணியினரால் முன்வைக்கப்பட்டுள்ள வெளிநாட்டு நிதிகள் மோசடிக் குற்றச்சாட்டு தொடர்பில் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்குப் பதிலளித்த அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் ரமேஸ் பத்திரண,

ஒரு டொலராகிலும் வெளிநாட்டிலிருந்து உதவியாக அரசாங்கத்துக்கு இன்றுவரை கிடைக்கவில்லை எனத் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு-

“உண்மையில் கொவிட்-19 வைரஸ் குறித்து நிதியமைச்சு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இன்றுவரை எந்தவொரு நாடுகளிலிருந்தும், நிறுவனங்களிலிருந்தும் ஒரு டொலர் கூட இலங்கைக்குக் கிடைக்கவில்லை.

அதேபோல, கடந்த நாட்களில் எதிரணியினரும் குற்றஞ்சாட்டியிருந்தனர். மூவாயிரம் வாகனங்களை அரசாங்கம் கொள்வனவு செய்துள்ளது எனவும் குறிப்பிட்டிருந்தனர். அது பொய்யான அறிவிப்பாகும்.

ஐந்து வருடங்களுக்கு எந்த வாகனமும் அரசியல்வாதிகளுக்கோ, அரச அதிகாரிகளுக்கோ இறக்குமதி செய்யப்படாது. மருந்துகள் வெளிநாட்டிலிருந்து கிடைத்திருக்கின்றன. அவற்றை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது” என்றார்.

Be the first to comment

Leave a Reply