பாடசாலைகள் – கல்லூரிகள் திறப்பது தொடர்பில் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள தகவல்!!!

கொரோனா வைரஸ் பரவல் அச்சுறுத்தல் காரணமாக மூடப்பட்டுள்ள பாடசாலைகள், பிரிவெனாக்கள், கல்வியியற் கல்லூரிகள், ஆசிரிய கலாசாலைகள் ஆகியன சுகாதார அமைச்சின் பரிந்துரைகள் கிடைக்கப் பெற்றதன் பின்னரே மீண்டும் திறக்கப்படும். திறக்கப்படும் தினம் மற்றும் முறைமை பற்றி பின்னர் அறிவிக்கப்படும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

பாடசாலைகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களை மீள ஆரம்பிப்பது குறித்து கல்வி அமைச்சின் செயலாளர் என்.எச்.எம்.சித்ரானந்தவினால் திங்கட்கிழமை வெளியிடப்பட்டுள்ள சுற்று நிரூபத்திலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுற்று நிரூபத்தில் கூறப்பட்டுள்ள விடயங்கள் வருமாறு,

சகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்கு பாடசாலை வளாகத்தில் இருக்க வேண்டிய தயார் நிலை தொடர்பிலான வழிகாட்டல்களுக்கு அமைய கல்வி அமைச்சினால் இந்த சுற்று நிரூபம் வெளியிடப்பட்டுள்ளது.

வைரஸ் பரவல் அச்சுறுத்தல் காரணமாக மூடப்பட்டுள்ள பாடசாலைகள் , பிரிவெனாக்கள், கல்வியியற் கல்லூரிகள், ஆசிரிய கலாசாலைகள் ஆகியன சுகாதார அமைச்சின் பரிந்துரைகள் கிடைக்கப் பெற்றதன் பின்னரே மீண்டும் திறக்கப்படும். திறக்கப்படும் தினம் மற்றும் முறைமை பற்றி பின்னர் அறிவிக்கப்படும்.

கல்வி அமைச்சின் 2019./02 ஆம் இலக்க பாடசாலைகள் சுகாதார மேம்பாட்டு சுற்று நிரூபத்துக்கு அமைவாக மாகாண கல்வி செயலாளரின் தலைமையில் மாகாண மட்டத்தில் சுகாதார மேம்பாட்டு குழு செயற்பட வேண்டும் என்பதுடன் அக்குழுவில் மாகாண கல்வி பணிப்பாளர், மாகாண சுகாதார சேவை பணிப்பாளர், மாவட்ட செயலாளர், மாவட்ட சுகாதார உத்தியோகத்தர், வலயக் கல்வி பணிப்பாளர்கள், மேலதிகமாக போக்குவரத்து மற்றும் உள்ளூராட்சி அலுவலகங்கள் போன்ற தெரிவு செய்யப்பட்ட அலுவலகங்களின் உத்தியோகத்தர்களும் உள்ளடக்கப்பட வேண்டும்.

மாகாண மட்டத்தில் மாகாண சுகாதார சேவை பணிப்பாளரின் ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டல்களுக்கு ஏற்ப தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட வேண்டுமென்பதுடன் அவற்றுக்கேற்ப நடவடிக்கைகள் செயற்படுத்தப்பட வேண்டும்.

அந்த வகையில் தற்போதைய நிலைமையைக் கருத்திற் கொண்டு பிரிவெனா மற்றும் பாடசாலைகளுக்கு வசதிகளை வழங்குதல் மற்றும் அவற்றுக்கு உதவுதல், கண்காணித்தல், வழிகாட்டுதல் மற்றும் திசைப்படுத்தல் என்பன அக்குழுவின் கடமைகளாகும்.

கல்வி வலய மட்டத்திலும் வலய சுகதார மேம்பாட்டு குழு உயிரோட்டமாக செயற்பட வேண்டுமென்பதுடன் மாவட்ட சுகாதார சேவை பணிப்பாளரின் ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டல்களின் அடிப்படையில் தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டு அவற்றுக்கு இயைபாகவே நடவடிக்கைகள் செயற்படுத்தப்பட வேண்டும்.

அவ்வாறே பிரிவெனாக்களின் பிரிவெனாபதி மதகுருக்கள் , பாடசாலை அதிபர்கள் தத்தமது தலைமையில் குறித்த பாடசாலை சுகாதார மேம்பாட்டு குழுவினை உயிரோட்டமாக செயற்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

சகல சந்தர்ப்பங்களிலும் பிரதேச சுகாதார உத்தியோகத்தர்களின் ஆலோசனைகளுக்கு ஏற்ப செயற்பட வேண்டும் என்பதுடன் விசேட சந்தர்ப்பங்களில் பிரதேச சுகாதார உத்தியோகத்தர் அலுவலகத்தின் உதவியை பெற்றுக் கொள்ள வேண்டும்.

அதற்கமைய கல்வியியற் கல்லூரிகளும் ஆசிரிய கலாசாலைகளும் தங்களது நிறுவனங்களுக்கு சுகாதார மேம்பாட்டு குழுக்களை அமைத்துக் கொள்ள வேண்டும்.

சுகாதார அமைச்சின் பரிந்துரைகளுக்கு அமைவாக சுகாதார ரீதியாக பாதுகாப்பானதொரு சூழல் காணப்படுவதாக உறுதிப்படுத்தப்பட்டதன் பின்னரே பாடசாலைகள் மற்றும் நிறுவனங்கள் ஆரம்பிக்கப்பட வேண்டும்.

ஆரம்பமாக பீடாதிபதிகள், அதிபர்கள் உள்ளடங்கலாக ஆசிரிய ஆளணி கல்வி சாரா ஆளணி ஆகியோர் கூடி பாடசாலைகளில் கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகளுக்கு தயார் செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

இங்கு நிறைவேற்றப்பட வேண்டிய முக்கிய விடயங்கள் குறித்து கீழ் குறிப்பிடப்படுகின்ற விடயங்களில் கூடுதலான கவனம் செலுத்தப்பட வேண்டும்.

அதாவது , அனைத்து பாடசாலைகளின் அல்லது நிறுவனங்களின் நுழைவாயில்கள் மற்றும் வெளியேறும் இடங்களுக்கு அருகில் , மலசல கூடங்களுக்கு அருகில் மற்றும் முடியுமெனின் வகுப்பறைகளுக்கு அருகே கை கழுவுவதற்கான வசதிகளை அமைத்தல்.

தொடர்ந்து நீரினை வழங்குவதற்கான ஏற்பாடுபகளை முன்னெடுத்தல் , தற்போது வேறு ஏதேனும் தேவைகளுக்காக பாடசாலை பயன்படுத்தப்படுவதாக இருந்தால் பாடசாலை ஆரம்பிக்கப்படுவதற்கு மூன்று தினங்களுக்கு முன்னர் அந் நடவடிக்கையை நிறைவு செய்தல்.

பாடசாலை அல்லது நிறுவனத்தை சுத்தம் செய்தல் மற்றும் அனைத்து இடங்களையும் கிருமி நீக்கம் செய்தல். உடலின் வெப்பத்தை அளவிடுவதற்கு பொருத்தமானதொரு இடத்தினை தீர்மானித்து தேவையான உபகரணங்களைப் பெற்றுக் கொள்ளல்.

யாராவது ஒரு பிள்ளை நோய் நிலைமையில் இருந்தால் அவரை அடுத்த பிள்ளைகளிலிருந்து தூரமாக்குவதற்காக அவசர மருத்துவ அறை ஒன்று வேண்டும் என்பதுடன் அங்கு தேவையான உபகரணங்கள் இருக்க வேண்டும்.

கல்வி மற்றும் கல்வி சாரா ஊழியர்களுக்கு அறிவுறுத்தல் , பொறுப்புக்களை வழங்குதல் மற்றும் தேவையான பயிற்சிகளை வழங்குதல் , பெற்றோர் மற்றும் பாடசாலை சமூகத்தை அறிவுறுத்துதல் என்பனவாகும்.

மேற்கூறப்பட்ட அடிப்படை நடவடிக்கைகள் நிறைவுற்றதன் பின்னர் பீடாதிபதிகள் , பிரிவெனாபதிகள், அதிபர்கள் தமது நிறுவனத்தின் அல்லது பாடசாலையின் சுகாதார பாதுகாப்பினை தொடர்ந்து பேணுவதற்கு மேற்கொள்ளப்படவுள்ள நடவடிக்கைகள் தொடர்பாக லொக் குறிப்பொன்றை இட்டு அது தொடர்பாக கோட்டத்துக்கு பொறுப்பான பிரதி கல்வி பணிப்பாளருக்கு வலய கல்வி பணிப்பாளருக்கு அல்லது பிரதான ஆணையாளருக்கு அறிவிக்க வேண்டும்.

அந்தந்த பிரதேசத்தில் காணப்படும் நிலைமையையும் மாணவர் எண்ணிக்கையையும் விசேடமாக கவனஞ் செலுத்தி படிமுறையாக பாடசாலைகள் ஆரம்பிக்கப்படும். அவ்வாறு ஆரம்பிக்கப்படும் தரம் மற்றும் மாணவர் எண்ணிக்கை தொடர்பான விபரங்கள் பாடசாலை அல்லது நிறுவனம் ஆரம்பிக்கப்படும் காலப்பகுதி மற்றும் ஒழுங்குமுறை ஆகியன பின்னர் அறிவிக்கப்படும்.

அது தொடர்பில் வழங்கப்படும் ஆலோசனைகளுக்கு ஏற்ப மாத்திரம் செயற்பட வேண்டும் என்பதுடன் பாடசாலை அல்லது நிறுவனம் ஆரம்பித்ததன் பின்னரும் எடுக்க வேண்டிய கீழ்வரும் நடவடிக்கைகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட வேண்டும்.

சமூக இடைவெளி , தனிநபர் இடைவெளியைப் பேணுதல், தனிப்பட்ட சுகாதார நடைமுறைகளை ஊக்குவித்தல், கழிவுகளை அகற்றுதலும் சுற்றுச்சூழல் சுத்தமும், உளச் சுகாதாரம் மற்றும் உளவியல் சமூக தேவைகள் தொடர்பாக கவனம் செலுத்துதல், நோய் தொடர்பாக புதிய தகவல்களை அறிந்து கொள்ளலும் அறிவூட்டுதலும் மற்றும் பாடசாலை நேரத்தில் ஒரு பிள்ளை அல்லது ஆளணி உத்தியோகத்தர் ஒருவர் நோய் வாய்ப்பட்டால் முறையான நடைமுறைகளைப் பின்பற்றுதல் என்பனவாகும்.

பாடசாலை மற்றும் கல்வி நிறுவனங்களை மீண்டும் ஆரம்பிப்பதற்கு முன்னர் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் பாடசாலை அல்லது நிறுவனம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது செயற்பட வேண்டிய முறைகள் தொடர்பாக விபரமான ஆலோசனைகள் மற்றும் அறிவுறுத்தல்கள் வழிகாட்டி கையேட்டில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

சகல பாடசாலைகள் அல்லது நிறுவனங்களின் தலைவர்களும் பொது சுகாதார மருத்துவர் அலுவலகத்துடன் நேரடி தொடர்புகளைப் பேண வேண்டும். ஏதேனும் அவசர நிலைமைகளின் போது தமது பிரதேசத்தின் மருத்துவ உத்தியோகத்தர்களின் ஆலோசனைகளை பெறுவதற்கு விரைவாக செயற்பட வேண்டும்.

விசேட நிலைமையின் போது 1390 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பினை ஏற்படுத்தி தேவையான ஆலோசனைகளையும் வழிகாட்டல்களையும் பெற்றுக் கொள்ள முடியும்.

இந்த முன்னாயத்த நடவடிக்கைகளுக்கு தேவைப்படுகின்ற உபகரணங்கள் மற்றும் பொருட்களை பெற்றுக் கொள்வதற்கு வழிகாட்டலில் தெரிவிக்கப்பட்டுள்ளவாறு நிதி ஒதுக்கீட்டினை வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதுடன் இதனை அனுமதிக்கப்பட்ட புதிய கருத்திட்டமாகக் கொண்டு அது வரையில் பாடசாலை அபிவிருத்தி சங்க கணக்கில் இது வரையில் பயன்படுத்தப்படாத அனுமதிக்கப்பட்ட கருத்திட்டங்களின் நிதியை பயன்படுத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

அதற்கேற்ப நேர அட்டவணையை தயாரித்தல் வகுப்புக்களை நடத்துதல் ஆசிரிய ஆசிரியர்களை தமது கடமைகளில் ஈடுபடுத்தல் தொடர்பாக அனைத்து பாடசாலைகளும் ஒரு திட்டத்தினை தயாரித்து கண்காணிப்பு மற்றும் சரிபார்ப்பு பட்டியல்களை தொடர்ந்தும் முறையாகப் பேண வேண்டும்

Be the first to comment

Leave a Reply