தாராள மிக்க நாடு இலங்கை- உலகப்பிரபல்ய Nas daily நிறுவுனர்..

கொரோனா பரவும் சந்தர்ப்பத்தில், இலங்கை தாராளம் மிக்க நாடாக தன்னை அடையாளப்படுத்தியுள்ளதாக, பிரபல வீடியோ இணையப் பதிவாளர் நுஸைர் யாசின் தெரிவித்துள்ளார்.

பேஸ்புக்கில் சுமார் ஒன்றரை கோடிக்கும் அதிகமான பின்தொடருபவர்களைக் கொண்ட Nas Daily (‘நாஸ் டெய்லி’) என அழைக்கப்படும் பிரபல பேஸ்புக் பக்கத்தின் உரிமையாளரான இவர் அண்மையில் மற்றுமொரு பேஸ்புக் பக்கமான Nas News (‘நாஸ் நியூஸ்’) எனும் பேஸ்புக் பக்கத்தை திறந்திருந்தார்.

குறித்த பக்கத்தில் இன்றையதினம் (12) வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றிலேயே அவர் இதனைத் தெவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் காரணமாக தங்களது நாட்டுக்கு திரும்ப முடியாது தவித்த, பதுளை மாவட்டம், எல்ல பகுதியில் சிக்கிய 14 சுற்றுலா பயணிகளுக்கு, பிரதேசவாசிகள் தங்குவதற்கு இடம், உண்ண உணவு வழங்கி கவனித்ததாக அவர் அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.

தமது கையில் பணம் இல்லாத நிலையில், பிரதேச மக்கள் உதவியுள்ளதாக தெரிவித்துள்ள அவர், இவ்வாறு நாட்டில் சிக்கியுள்ள சுற்றுலா பயணிகளின் நலன் கருதி, இலங்கை சுற்றுலாத் துறையினரால் முன்னெடுக்கப்படும் திட்டம் தொடர்பிலும் புகழ்ந்துள்ளார்.

சுற்றுலாத்துறை வீழ்ச்சியடைந்த போதிலும், உச்சத்திலுள்ள போதிலும் இலங்கை மக்கள் சிறந்த உபசரிப்பாளர்கள் எனவும் அவர் அதில் தெரிவித்துள்ளார்.

ஏனைய நாடுகளில் உள்ள சுற்றுலா பயணிகள், நாடு திரும்ப முடியாத நிலையில், ஹோட்டல்களில் தங்குவதற்கு போதிய பணம் கையிருப்பில் இல்லாது கஷ்டப்படுவதாக தெரிவிக்கும் அவர், அவர்களுக்கும் உதவி வழங்கப்பட வேண்டும் என தெரிவிக்கிறார்.

சுற்றுலாத் துறை இன்னும் ஓரிரு வருடங்களில் மீளும் என நம்பிக்கை வெளியிட்டுள்ள அவர், அவ்வேளையில் இலங்கைக்கு சென்று அங்குள்ள ஹோட்டல்களில் தங்கி இலங்கையின் பொருளாதாரத்திற்கு உதவ வேண்டும் எனவும் தெரிவிக்கிறார். அதுவே இலங்கைக்கு செய்யும் பிரதி உபகாரம் எனவும் அவர் தனது வீடியோவில் தெரிவிக்கிறார்.

Be the first to comment

Leave a Reply