சர்வாதிகாரம் தோன்றுவதை எதிர்க்க வேண்டும் என்றவர்கள் அன்று..ஆனால் இன்று..கூட்டமைப்பின் நிலை

தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஜனாதிபதி கோட்டபாய இராஜபக்க்ஷவின் சர்வாதிகார சக்திகளை பகிரங்கமாக வலுப்படுத்த முன்வந்துள்ளது. கோவிட்-19 தொற்றுநோய்க்கு மத்தியில் அவர் இராணுவத்தில் நேரடியாக நம்பியிருக்கிறார்.

அரசாங்கம் ஊரடங்கினை கடுமையாக கையாளுவதற்கு எதிராக தொழிலாள வர்க்கத்தின் மத்தியில் எதிர்ப்பு அதிகரித்துக்கொண்டு வருவதின் மத்தியில், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் செய்தித் தொடர்பாளர் எம்.ஏ.சுமத்திரன் தனது பகிரங்கமான அறிக்கையில் இதனை மிகத்தெளிவாக எடுத்துக்காட்டியுள்ளார்.


பிரதமர் மஹிந்த இராஜபக்க்ஷவுடன் திங்கட்கிழமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மூடிய கதவிற்கு பின்னால் ஒரு கூட்டத்தை நடத்தியது. 1983-2009 இலங்கை உள்நாட்டு போரின் இறுதி நாட்களில் அப்பாவி தமிழ் பொதுமக்களையும் தோற்கடிக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் (LTTE) போராளிகளையும் படுகொலை செய்யப்பட்டதை மேற்பார்வையிட்டதற்காக அவர் பெரிதும் வெறுக்கப்படுகிறார்.


2019 ஜனாதிபதித் தேர்தலில் கோட்டபாய இராஜபக்க்ஷ மிகவும் வெறுக்கப்பட்டதுடன், அவருக்கு எதிராக வலதுசாரி ஐக்கிய தேசியக் கட்சி (UNP) வேட்பாளர் சஜித் பிரேமதாசாவுக்கு வாக்களிக்குமாறு அழைப்புவிட தமிழ் தேசிய கூட்டமைப்பு நிர்ப்பந்திக்கப்பட்டது.

ஏனென்றால், மஹிந்த இராஜபக்க்ஷவின் கீழ், போரை எதிர்த்தவர்கள் ஒரு தொகையாக வெள்ளை வாகனங்களில் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டனர். இவர்களில் சிங்கள மக்களும், தமிழ் மக்களும் அடங்குவர். இதனால் கடந்த ஆண்டு நவம்பரில், ஒரு “சர்வாதிகாரிக்கு” யாரும் வாக்களிக்கக் கூடாது என கூறி, இராஜபக்க்ஷவுக்கு எதிராக வாக்களிக்க தமிழ் தேசிய கூட்டமைப்பு அழைப்பு விடுத்தது. எவ்வாறாயினும் ஆறு மாதங்கள் கழிந்து, இந்த வாரம், சுமந்திரனும் பிற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அங்கத்தவர்களும் இராஜபக்க்ஷவை சந்தித்தபின்னர், மக்கள் அவரது விருப்பத்திற்கு அடிபணிய வேண்டும் எனக் கோரினர்.


மஹிந்த இராஜபக்க்ஷ உடனான இரகசிய சந்திப்புக்குப் பின்னர், சுமந்திரன் பெருமையுடன் ஊடகங்களிடம் பின்வருமாறு கூறினார்: “எமது நிலைப்பாடாக, அதாவது இந்த சூழ்நிலையில், அனைவரும் ஒத்துழைத்து அரசுக்கு ஆதரவு கொடுக்க வேண்டும். அது முதலாவது விடயம். ஆதலால்தான் இந்தக் கூட்டத்திற்கு நாங்கள் வந்தோம். எமது ஒத்துழைப்பை அரசுக்கு முழுமையாக கொடுப்போம்.

இப்படியான ஒரு சூழ்நிலையில் அரசியல் கருத்துக்கு இடம் கொடுக்க முடியாது. அரசியல் பேதங்களுக்கு இடம் கொடுக்க முடியாது. இதை எமது நாட்டுக்குள் மட்டுமல்ல, உலகம் பூராகவும் செய்ய வேண்டும்.’’


இராஜபக்க்ஷ சகோதரர்களுக்கு முழுமையாக அடிபணிய வேண்டும் என்ற சுமந்திரனின் கோரிக்கை கொழும்பில் ஒரு இராணுவ சதி பற்றி அதிகரித்துவரும் வதந்திகள் மற்றும் அச்சங்களுக்கு மத்தியில் வந்துள்ளது. ஏனெனில் அவர்கள் ஊரடங்கைப் பயன்படுத்தி தமிழ்மக்கள் பெரும்பான்மையாக உள்ள வடக்கு கிழக்கில் மட்டுமல்ல, நாட்டின் பிற பகுதிகளிலும் இராணுவ ஆக்கிரமிப்பை விரிவுபடுத்துகின்றனர். ஆரம்பத்தில் இராஜபக்க்ஷ மார்ச் 2 ம் தேதி இலங்கை நாடாளுமன்றத்தை கலைத்து, ஏப்ரல் 25 க்கு புதிய தேர்தல்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.

பின்னர் மார்ச் 20 அன்று ஊரடங்கு உத்தரவு மற்றும் முடக்குதல் (lockdown) விதிக்கப்பட்ட பின்னர், அவர் தேர்தலை ஜூன் 20 வரை ஒத்திவைத்தார்.
முன்னதாக, நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்டக்கோரி, ஆறு கட்சிகள் சேர்ந்து எழுதிய கடிதத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பும் கையெழுத்திட்டது.

இலங்கை ஆளும்தட்டின் குற்றவியல் நடவடிக்கைகளுக்கு ஒப்புதல் வழங்கும், மற்றும் வெற்றுக் கூடாரமாக இருக்கும் பாராளுமன்றத்தை மீண்டும் திறப்பதால் உழைக்கும் மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கப் போவதில்லை. மேலும் இராஜபக்க்ஷவினருக்கு தாம் ஒரு பலவீனமான எதிர்ப்பாளர் போன்ற தமிழ் தேசியவாதிகளின் பாசாங்கும் கூட இதன் மூலம் அம்பலமாகியுள்ளது.


இராஜபக்க்ஷ ஆட்சிக்கு எதிராக வெகுஜனங்களின் கோபம் அதிகரித்துவரும் வேளையில் சுமந்திரன் பகிரங்கமாக அதனுடன் இணைந்து கொள்கிறார். மார்ச் 20 முதல் அமுலில் உள்ள ஊரடங்கு உத்தரவு மற்றும் முடக்குதலின் கீழ், மக்கள் முற்றிலும் போதிய உதவிகளைப் பெறாததுடன், உழைக்கும் மக்கள் பசி மற்றும் பட்டினி ஆபத்தினால் பாதிக்கப்படுகின்றனர். கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவலின் மத்தியில் மருந்து, உணவுப் பொருட்கள் வாங்க பணமின்மை, வேலை வெட்டுக்கள் மற்றும் வேலைக்குத் திரும்புவதை கட்டாயமாக நிர்ப்பந்திப்பது பற்றிய விவாதம் ஆகியவை உழைக்கும் மக்களுக்கு சகித்துக்கொள்ள முடியாத நிலைமைகளை உருவாக்கியுள்ளன.


மறுபக்கத்தில், முக்கிய முதலீட்டாளர்களுக்கு பாரிய இழப்பீட்டுத் தொகைகள் மற்றும் வங்கிகள் மற்றும் பெரிய நிறுவனங்களுக்கு பிணையெடுப்புக்களை அரசாங்கம் தயாரித்து வருகிறது. முதலாளித்துவ பத்திரிகைகளின் தகவல்களின்படி, இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 82 சதவீதத்திற்கு சமமான 72 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு கடன்களை இலங்கை கொண்டுள்ளது. இவற்றில், 35 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வெளிநாட்டுக் கடன்களில் உள்ளன.

இலங்கையின் வரலாற்றில் மிகப் பெரிய கடன் திருப்பிச் செலுத்துதலாக 4.8 பில்லியன் அமெரிக்க டாலரை கடனுக்கான செலவாக அரசாங்கம் இந்த ஆண்டு செலுத்த வேண்டும். அது, தமிழ் தேசியவாதிகளின் ஒத்துழைப்புடன் இந்த கடன் சுமையை தொழிலாளர்களின் முதுகில் சுமத்த திட்டமிடுகிறது.

ஜனாதிபதி கொலைக்குற்றத்திற்காக மரணதண்டனை விதிக்கப்பட்ட சுனில் ரத்நாயக்காவிற்கு மன்னிப்பளித்து விடுதலை செய்தார். 2000 ஆம் ஆண்டு நடந்த ஒரு அட்டூழியத்திற்காக 2015 ஆம் ஆண்டில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட சுனில் ரத்நாயக்க, மூன்று குழந்தைகள் உட்பட எட்டு தமிழ் பொதுமக்களை கண்மூடித்தனமாக தொண்டை அறுத்து, அவர்களின் உடல்களை சாக்கடையில் வீசியெறிந்திருந்தார்.

இருந்தபோதிலும், சுமந்திரன் இராஜபக்க்ஷ ஆட்சியை தடையின்றி பாராட்டுகிறார். ஏனெனில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழ் சிறுபான்மை மக்களை அல்ல, மாறாக இலங்கையில் உள்ள முதலாளித்துவத்தின் ஒரு மோசமான மற்றும் ஊழல்மிக்க அடுக்கினை பிரதிநிதித்துவப்படுத்துகின்றது.

இது ஏகாதிபத்திய சக்திகளுடன், குறிப்பாக தொற்றுநோய்க்கு மத்தியில் வேலைக்கு திரும்ப வேண்டும் என்று அழுத்தம் கொடுக்கின்ற மற்றும் சர்வதேச அளவில் உழைக்கும் மக்கள் மீதான தாக்குதலை முடுக்கிவிட்டுள்ள வாஷிங்டனுடன் இணைந்து தனது கொள்கையை உருவாக்குகிறது.


இனம், தேசியம் அல்ல வர்க்கமே தமிழ் முதலாளித்துவத்தின் பிற்போக்குத்தனமான கொள்கைகளை தீர்மானிக்கிறது. அதன் செல்வமும் சலுகைகளும் ஏகாதிபத்தியத்தால் ஆதிக்கம் செலுத்தும் உலகளாவிய சந்தைகளுக்கான அணுகலிலேயே தங்கியுள்ளது. கொரோனா தொற்று பரவலுக்கு பின்னர் வீட்டிலேயே தங்கவைக்கப்பட்டுள்ளதால் அவ்வாறான குறைந்த ஊதியத்தில் தொழிலாளர்களை சுரண்டுவது அவர்களுக்கு கிட்டத்தட்ட சாத்தியமற்றதாகியுள்ளது.

எனவே, இந்த குறைந்த ஊதிய தொழிலாளர்களின் உழைப்பினால் உயிர்வாழும் சந்தைகளுக்கான இலாபத்தின் வீழ்ச்சியானது, இந்த தமிழ் முதலாளித்துவ தட்டினரின் இலாபங்களிலும் இழப்பை ஏற்படுத்தியுள்ளது.


மனித வாழ்க்கை தொடர்பாக அலட்சியத்தை காட்டும் தமிழ் தேசிய கூட்டமைப்பு சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் மத்தியில் அதிகரித்து வரும் கோபத்தினை பற்றி அஞ்சுகிறது. அமெரிக்க தொழிலாளர்கள் ஒரு நாளைக்கு ஆயிரக்கணக்கான இறப்புகளுக்குப் பழக வேண்டும் என்று கூறி ட்ரம்ப் நிர்வாகம் மகிழ்ச்சியடைகிறது.

மேலும் ஐரோப்பிய அரசாங்கங்களும் அதிகரித்துவரும் தொற்றுக்கு மத்தியில் பல மில்லியன் கணக்கான தொழிலாளர்களை வேலைக்கு அனுப்புகின்றன. இந்தியாவில் இந்து-மேலாதிக்க நரேந்திரமோடி அரசாங்கத்தின் பிற்போக்குத்தனமான முஸ்லீம் எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு எதிராக கடந்த ஆண்டு வெகுஜன போராட்டங்கள் வெடித்தன.

எவ்வாறாயினும், எந்தவொரு அரசியல் விமர்சனங்களையும் இலங்கையில் மட்டுமல்லாமல், “உலகெங்கிலும்” சகித்துக் கொள்ள முடியாது என திமிர்த்தனமாக சுமந்திரன் அறிவிக்கிறார்.
2018 ஆம் ஆண்டில், சுமந்திரன் ஏகாதிபத்திய சக்திகளுடனான தனது நெருங்கிய தொடர்பை மிரட்டும் தொனியுடன் அறிவித்தார்.

அவர் ஊடகங்களுக்கு கூறுகையில், “சர்வதேச சமூகத்துடன் நெருக்கமான தொடர்புகளைப் பேணுகின்றவன் என்ற அடிப்படையில், அதன் நாடித் துடிப்பை அறிந்தவன் நான்”. இலங்கை உள்நாட்டுப் போரின் முடிவின் பின்னரான நிகழ்வுகள், இந்த கருத்தின் வர்க்க உள்ளடக்கத்தையும் இன்னமும் அம்பலத்துக்கு வராத அதன் குற்றவியல் பாத்திரத்ததையும் தெளிவுபடுத்தியுள்ளன.


2009 ல் இலங்கை உள்நாட்டுப் போரின் இறுதி மாதங்களில் இராணுவத் தளபதியாக இருந்த ஜெனரல் சரத் பொன்சேகாவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 2010 ஜனாதிபதித் தேர்தலில் ஆதரித்தது. அந்த நேரத்தில், கோட்டபாய இராஜபக்க்ஷ பாதுகாப்புத் செயலாளராகவும், மஹிந்த இராஜபக்க்ஷ ஜனாதிபதியாகவும் இருந்தனர். நாட்டின் வடக்கில் 40,000 க்கும் மேற்பட்ட தமிழ் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டதற்கும், ஆயிரக்கணக்கான மக்கள் வலுக்கட்டாயமாக காணாமல் ஆக்கப்பட்டதற்கும் இந்த மூவரும் அரசியல் பொறுப்பைக் கொண்டுள்ளனர்.

இதில் தமிழ் மக்கள் மட்டும் உள்ளடங்கியிருக்கவில்லை.
ஏற்கெனவே, அமெரிக்க ஏகாதிபத்தியத்தால் ஆதரிக்கப்பட்டு, ஆட்சி மாற்ற நடவடிக்கையினால் நிறுவப்பட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி (SLFP) மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி (UNP) கூட்டணி அரசாங்கம் 2015 ல் ஆட்சிக்கு வருவதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு முழுமையாக ஆதரவளித்து அச்சாணியாக செயற்பட்டது. அந்த நேரத்தில் அவர்களை சீனாவுடன் மிக நெருக்கமாக இணைத்திருப்பதாக கருதி வாஷிங்டன் இராஜபக்க்ஷ சகோதரர்களை வெளியேற்ற எண்ணியது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி-ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் மேற்கொண்ட வரவு-செலவுத் திட்ட வெட்டுக்கள், சர்வதேச நாணய நிதியத்தால் கட்டளையிடப்பட்ட சிக்கனக் கொள்கைகள் மற்றும் அப்பாவி முஸ்லிம் மக்களை குறிவைத்த அதன் அவசரகால சட்டங்கள், அத்தோடு வேலைநிறுத்தங்கள் மற்றும் வெகுஜன எதிர்ப்புகள் எழுச்சியடைந்த வேளையிலும், தமிழ் தேசியக் கூட்டமைப்பு எதிர்க் கட்சி ஆசனங்களிலிருந்து அரசாங்கத்தை பாதுகாத்தது.
2015 ஆட்சி மாற்ற நடவடிக்கையின் போது தமிழ் தேசியக் கூட்டமைப்பு, நல்லாட்சி அரசாங்கம் தீவில் இன மோதல் உட்பட தீர்க்கப்படாத அனைத்து ஜனநாயக கடமைகளையும் தீர்க்கும் என வாக்குறுதியளித்தது. ஆட்சிக்கு வந்ததும், வாக்குறுதிகளை காற்றில் பறக்க விட்டு, 180 பாகை திரும்பியது.

தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க சிறைச்சாலை சாவிகள் தன்னிடம் இல்லை என அதன் தலைவர் ஆர்.சம்பந்தன் 2016 இல் இழிந்த முறையில் அறிவித்ததுடன், அதே நேரத்தில் இலங்கை, அமெரிக்க இராணுவ, சிவில் அதிகாரிகளை தொடர்ந்தும் சந்தித்து வந்தார்.


ஏகாதிபத்தியத்திற்கும் முதலாளித்துவத்திற்கும் எதிரான போராட்டத்திற்கு தொழிலாள வர்க்கத்தை சர்வதேச ரீதியாக ஐக்கியப்படுத்தும் போராட்டத்தின் அடிப்படையில் தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகளை பாதுகாக்கும் அதே வேளையில், தமிழ் தேசியவாதத்திற்கு எதிரான சோசலிச சமத்துவக் கட்சியின் பல தசாப்த கால எதிர்ப்பை தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பிற்போக்கு வரலாறு முற்றுமுழுதாக நிரூபிக்கிறது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் கொள்கைகளும், தொற்றுநோய்களுக்கு மத்தியில் உலகெங்கிலும் உள்ள பிற்போக்கு அரசாங்கங்களுக்கு தொழிலாளர்கள் மொத்தமாக அடிபணியவேண்டும் என்ற அதன் கோரிக்கையும் அவர்களை தொழிலாள வர்க்கத்தின் எதிரிகள் என்று முத்திரை குத்துகிறது.


இலங்கை, இந்திய துணைக் கண்டம் மற்றும் உலகளவில் சோசலிசத்திற்கான ஒட்டுமொத்த தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியப்பட்ட போராட்டத்தால் மட்டுமே கொரோனா தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கான வளங்களை வழங்கவும் மற்றும் முன்னாள் காலனித்துவ நாடுகளில் அடிப்படை ஜனநாயக உரிமைகளையும் பாதுகாக்க முடியும்.

Be the first to comment

Leave a Reply