முள்ளிவாய்க்கால் நினைவு தொடர்பாக கலைப்பீட மாணவர் ஒன்றியம் அறிக்கை வெளியிட்டுள்ளது..

முள்ளிவாய்க்கால் அவலமானது மனிதகுலத்தின் மனச்சாட்சியை தட்டியுள்ளதுடன்  மனித உரிமை பிரகடனங்களை கேள்விக்குரியாக்கி பல நாடுகளின் முகத்திரையினை கிழித்தெறிந்துள்ளது என்றே கூறலாம்.

அந்தவகையில் இன்று முள்ளிவாய்க்கால் நினைவு வாரம் ஆரம்பமாகியுள்ளது.இந்நிலையில் யாழ் பல்கலைக்கழக கலைபீட மாணவர் ஒன்றியம் தமது கருத்தை வெளியிட்டுள்ளது.

அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது.முள்ளிவாய்க்கால் இனவழிப்பின் பதினோராம் ஆண்டு நினைவேந்தலில் கடந்த முப்பது வருடங்களாக நீடித்த தமிழர்களின் இன ஒறுப்புக்கள் 2009 இல் வகை தொகையின்றி இம்மண்ணில் சிங்கள அரசால் நடந்தேறியது தமிழினத்தின் மீது நடந்தேறும் கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையை ஐ.நாவும் சர்வதேச சமூகமும் வெறுமனே அவதானித்துக் கொண்டிருப்பது கவலைக்குரியதானது.

பாதிக்கப்பட்ட மக்களின் கோரிக்கைகளின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலைக்கான நீதிவேண்டி தமிழர்கள் ஒரு தசாப்த காலமாக ஐ.நாவின், சர்வதேச சமூகத்தின் உதவியை நாடியுள்ளார்கள்.

நடந்தேறிய அநீதிகளையும், உரிமை மீறல்களையும் விசாரிப்பதற்கான சர்வதேச நீதி விசாரணை இன்னும் ஆரம்பித்தாகத் தெரியவில்லை,” சர்வதேசமும் கண்துடைப்பு நாடகத்தையே தமிழர்களின் உணர்வான போராட்ட வழிமுறைகளிலும் காட்டி வருகின்றது இதனை நாம் வன்மையாக கண்டிக்கிறோம் கொல்லப்பட்ட அப்பாவி மக்களுக்கான நீதி சர்வதேசத்தால் நிராகரிக்கப்பட்டு வருகின்றமை தமிழர்களின் இனவழிப்பை கைகட்டி பார்க்கும் செயலாக கருதமுடிவதுடன் கொலையாளிகள் சர்வதேச நீதிப்பொறிமுறை மூலம் தண்டனை பெறவேண்டும் நீதியை சர்வதேசம் நிலைநாட்ட வேண்டும் என்பதே தமிழ்மக்கள் கோரிக்கையாகவும் அமைகின்றது.

பலவருடங்களாக நடந்தேறிய இனவன்முறை இறுதியாக முள்ளிவாய்க்கால் மண்ணில் நிறைவடைந்த நிலையின் இன்னமும் எதுவித விசாரணைகளோ முன்னேற்றங்களோ இடம்பெற்றதாக காணப்படாதது சர்வதேசம் மீது நம்பிக்கையீனமாக அமைகிறது இதற்கான விசாரணைகள் துரிதப்படுத்தலும் தமிழ்மக்களிற்கான நீதியையும் பெற்றுத்தர சர்வதேச சமூகம் முன்வரவேண்டும்.

யாழ் பல்கலை கலைப்பீட மாணவர் ஒன்றியம்

Be the first to comment

Leave a Reply