டிசம்பருக்குள் 11 கோடி, 60 இலட்சம் குழந்தைகள் பிறக்கும்…

டிசம்பருக்குள் 11 கோடி, 60 இலட்சம் குழந்தைகள் பிறக்கும்!

இந்தியாவில் வரும் டிசம்பர் 16ஆம் திகதி வரையில் 2 கோடி குழந்தைகள் பிறக்கும் என்று ஐ.நா.வின் குழந்தைகள் நல அமைப்பான யுனிசெப் கூறி உள்ளது. அதே நேரத்தில் கொரோனா வைரசால் பிரசவ பராமரிப்பில் பாதிப்பு ஏற்படும் என்றும் எச்சரித்துள்ளது.

சீனாவின் உகான் நகரில் கொரோனா வைரஸ் தொற்று கடந்த ஆண்டு டிசம்பர் 1ஆம் திகதி முதன் முதலாக தென்பட்டது. அதைத் தொடர்ந்து இந்த கொலைகார வைரஸ் தொற்று, உலகளாவிய தொற்று நோய் என சென்ற மார்ச் மாதம் 11ஆம் திகதி உலக சுகாதார நிறுவனத்தால் அறிவிக்கப்பட்டது.

இந்த கொரோனா வைரஸ் தொற்று மென்மேலும் பரவாமல் தடுப்பதற்காக உலக நாடுகள் பலவும் ஊரடங்கு நடவடிக்கையை எடுத்தது. பொதுமக்கள் வீடுகளுக்குள் முடங்கி உள்ளனர்.

இந்த நிலையில், உலகமெங்கும் பெண்கள் கருத்தரிப்பது அதிகமாகும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்த கர்ப்பங்களால் உலகமெங்கும் 11 கோடியே 60 இலட்சம் குழந்தைகள் பிறக்கப்போகின்றன.

கொரோனா வைரஸ் தொற்று உலகளாவிய தொற்றுநோயாக அறிவிக்கப்பட்ட கடந்த மார்ச் 11ஆம் திகதிக்கு பின்னர் 9 மாதங்களில் உலகில் இதுவரை இல்லாத வகையில் அதிக எண்ணிக்கையில் குழந்தை பிறப்பு இருக்கும். இந்தியாவில்தான் அதிக குழந்தைகள் பிறக்கும். அதாவது, மார்ச் 11ஆம் திகதி தொடங்கி டிசம்பர் 16ஆம் திகதி வரையில் 2 கோடியே 10 இலட்சம் குழந்தைகள் பிறக்கும் என்று ஐ.நா.வின் குழந்தைகள் நல அமைப்பு யுனிசெப் கணித்துள்ளது. இதே போன்று கொரோனா வைரஸ் தோன்றிய நாடான சீனாவில் 1 கோடியே 35 இலட்சம் குழந்தைகள் பிறக்கும்.

நைஜீரியாவில் 64 இலட்சம் குழந்தைகளும், பாகிஸ்தானில் 50 லட்சம் குழந்தைகளும், இந்தோனேசியாவில் 40 இலட்சம் குழந்தைகளும் பிறக்கும் என்று யுனிசெப் கூறி உள்ளது. எதிர்பார்க்கப்படுகிற குழந்தைகளின் எண்ணிக்கையில் 6 வது இடத்தில் உள்ள அமெரிக்க நாட்டில் மார்ச் 11 முதல் டிசம்பர் 16 வரையில் 32 .இலட்சம் குழந்தைகள் பிறக்கும்.

இந்த நாடுகளில் எல்லாம் கொரோனா வைரஸ் தொற்றுநோய் தோன்றுவதற்கு முன்பாகவே புதிதாக பிறந்த குழந்தைகளின் இறப்புவீதம் அதிக அளவில் இருந்ததாகவும், இது கொரோனா வைரஸ் பரவியுள்ள சூழ்நிலையில் மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதாகவும் யுனிசெப் எச்சரித்துள்ளது.

நடப்பு ஆண்டின் ஜனவரி முதல் டிசம்பர் மாதம் வரையில் இந்தியாவில் 2 கோடியே 41 இலட்சம் குழந்தைகள் பிறக்கும் என்றும் தெரிய வந்துள்ளது. அதே நேரத்தில் கொரோனா வைரசை கட்டுப்படுத்த மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளால் பிரசவ பராமரிப்பு, உயிர்காக்கும் சுகாதார சேவைகள் பாதிக்கும், கர்ப்பிணிகள் மற்றும் அவர்களது குழந்தைகளுக்கு ஆபத்து ஏற்படும் வாய்ப்பும் உள்ளது என்று தகவல்கள் கூறுகின்றன.

இதன் காரணமாக பணக்கார நாடுகள் கூட பாதிப்புக்கு ஆளாகுமாம். புதிய தாய்மார்களும், புதிய குழந்தைகளும் கொரோனா வைரசால் ஏற்பட்டுள்ள கடுமையான எதார்த்தங்களுக்கு மத்தியில் வரவேற்கப்படுகிற சூழல் உருவாகும். இதையொட்டி யுனிசெப் அமைப்பின் செயல் இயக்குனர் ஹென்ரிட்டா போரே கூறியதாவது:-

உலகமெங்கும் கோடிக்கணக்கான பெண்கள் தாயாகும் நடவடிக்கையில் இறங்கி உள்ளனர். ஆனால் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு விடுமோ என்ற பயத்தில் சுகாதார மையங்களுக்கு செல்லலாம். அவர்கள் சுகாதார பணிகளில் ஏற்பட்டுள்ள பாதிப்பால் அவசர சிகிச்சையை இழக்க நேரிடலாம். எந்த ஒரு சூழலிலும் இப்போது அமையக்கூடிய வாழ்க்கை சூழலுக்கு அவர்கள் தங்களை பக்குவப்படுத்தி கொண்டு தயாராக வேண்டும்.

கொரோனா வைரஸ் தொற்றுநோய் சூழல், தாய்மை அடைவதை மறுபரிசீலனை செய்ய வைக்கும் என்றெல்லாம் கற்பனை செய்ய முடியாது.

இந்த ஆண்டு சர்வதேச அன்னையர் தினம் ஒரு கடுமையான தினமாக அமைகிறது. ஏனென்றால், கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக பல குடும்பங்கள் பிரித்து வைக்கப்பட்டுள்ளன. இது ஒற்றுமைக்கான நேரம். அனைவரையும் ஒன்றிணைக்கும் நேரம்.

ஒவ்வொரு கர்ப்பிணி தாயும், அவளுக்கு தேவையான ஆதரவை பெறுவதை உறுதி செய்ய வேண்டும். இதன்மூலம் அடுத்தடுத்த மாதங்களில் பாதுகாப்பாக குழந்தை பிறக்கவும், உயிரைக்காப்பாற்றவும் நாங்கள் உதவ முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

வரும் மாதங்களில் உயிர்களை காப்பதற்கு அரசாங்கங்கள் தேவையான சுகாதார பராமரிப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று யுனிசெப் கேட்டுக்கொண்டுள்ளது.
குறிப்பாக கர்ப்பிணிகளுக்கு தேவையான மருத்துவ பரிசோதனைகளை பெறவும் நல்ல விதமாக குழந்தைகளை பெற்றெடுக்கவும், பிரசவத்துக்கு பிந்தைய கவனிப்புகளை சரியாக பெறவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் யுனிசெப் கேட்டுக்கொண்டுள்ளது.

Be the first to comment

Leave a Reply